அகதிகளை ஏன் தடுக்கவில்லை? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
அகதிகளை ஏன் தடுக்கவில்லை? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
ADDED : டிச 07, 2024 09:32 PM
புதுடில்லி:“தலைநகர் டில்லியில் சீர்குலைந்துள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதை அரசியல் ஆக்கக்கூடாது,”என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:
தலைநகர் டில்லியில் சட்டம் - -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கொலை மற்றும் கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது. நகரில் துப்பாக்கிப் புழக்கம் அதிகரித்துள்ளது. சீரழிந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கை சீரமைக்க மத்திய உள்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ., அரசு இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது.ட் தேசிய தலைநகர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடமை.
டில்லி மாநகரப் போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. காலை நடைப் பயிற்சி சென்ற தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பஞ்சசீல் என்கிளேவில் முதியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். டில்லி மக்கள் பீதியிலேயே வாழ்கின்றனர்.
டில்லி மாநகரின் மூலை முடுக்கெல்லாம் போதைப்பொருள் சகஜமாக விற்கப்படுகிறது. டில்லி போலீஸ் எங்கே? உள்துறை அமைச்சர் எங்கே?
ரோஹிங்கியாக்கள் தான் குற்றச்செயல்களுக்கு காரணம் என பா.ஜ., கூறுகிறது. ரோஹிங்கியாக்கள் குற்றவாளிகள் என்றால், மியான்மர் மற்றும் வங்கதேச எல்லையில் அவர்களை ஏன் மத்திய உள்துறை அமைச்சகம் தடுக்கவில்லை? அவர்கள் டில்லிக்குள் எப்படி நுழைந்தனர்?
இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்குப் பதில், டில்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக ஆம் ஆத்மியினர் மீது பொய் வழக்குகளை போடுவதை நிறுத்தி விட்டு, குற்றவாளிகளை கைது செய்ய மக்களைக் காப்பாற்ற வேண்டும்.