ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? கார்கே விளக்கம்
ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? கார்கே விளக்கம்
UPDATED : டிச 11, 2024 04:52 PM
ADDED : டிச 11, 2024 04:48 PM

புதுடில்லி: '' ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக வேறு வழியில்லாமல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம், '' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின், ' இண்டியா ' கூட்டணி கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக அக்கூட்டணி தலைவர்கள் டில்லியில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது கார்கே கூறியதாவது: ராஜ்யசபா அரசியல் ரீதியில் நடத்தப்படுகிறது. விதிகளின் படி செயல்படவில்லை. 1952 முதல் எந்த துணை ஜனாதிபதியும் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால், அவர்களுக்கு எதிராக விதி எண் 67 ன் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. ஒரு தலைபட்சம், பாரபட்சம் காரணமாக தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டு உள்ளன.
பதவி உயர்வுக்காக அரசின் செய்தித் தொடர்பாளர் போல் தன்கர் நடந்து கொள்கிறார். அவரின் நடவடிக்கைகள், அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்திற்கு மாறாக உள்ளது. எதிர்க்கட்சியை விமர்சிக்கும் அவர், அரசை புகழ்ந்து தள்ளுகிறார். வேறு வழியில்லாமல் இந்த நோட்டீசை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு எங்களை அவர் தள்ளியது கவலை அளிக்கிறது. எதிர்க்கட்சிகளை அவமதிக்கும் வாய்ப்புகளை அவர் விடவில்லை.
நாட்டின் ஜனநாயக பெருமைகளை அவரின் நடவடிக்கைகள் கெடுத்துள்ளன. அவருடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமோ அல்லது அரசியல் ரீதியிலான மோதலோ இல்லை. தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்ளும் அவர், எங்களை மாணவர்கள் போல் நடத்துகிறார். தீவிர ஆலோசனைக்கு பிறகு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இவ்வாறு கார்கே கூறினார்.