பெண் டாக்டரிடம் அத்துமீறிய அதிகாரியை காப்பாற்றுவது ஏன்? கவர்னருக்கு ஆம் ஆத்மி கேள்வி
பெண் டாக்டரிடம் அத்துமீறிய அதிகாரியை காப்பாற்றுவது ஏன்? கவர்னருக்கு ஆம் ஆத்மி கேள்வி
ADDED : அக் 12, 2024 10:42 PM
புதுடில்லி:“அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சுகாதார அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் நேற்று கூறியதாவது:
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் டாக்டர் புகார் செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காமல் துணைநிலை கவர்னர் சக்சேனா மவுனமாக இருப்பது ஏன்?
பெண் டாக்டர் புகார் செய்து நான்கு மாதங்களுக்குப் பிறகே கடந்த மார்ச் விசாரணை துவக்கப்பட்டது. விசாரணை நடத்திய குழு, பெண் டாக்டரிடம் கண்காணிப்பாளர் அத்துமீறி நடந்து கொண்டது உண்மைதான் என அறிக்கை அளித்தது.
அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் விசாரணை அறிக்கையை கவர்னர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் டில்லி அரசின் சுகாதார செயலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், பெண் டாக்டரிடம் அத்துமீறிய கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.