நான் ஏன் ராஜினாமா செய்யணும்? கேட்கிறார் சித்தராமையா
நான் ஏன் ராஜினாமா செய்யணும்? கேட்கிறார் சித்தராமையா
ADDED : செப் 24, 2024 07:18 PM

பெங்களூரு: '' நான் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
'மூடா ' முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் கெலாட் உத்தரவை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. விசாரணை நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா என்பது குறித்து நிபுணர்களுடன் சட்ட ஆலோசனை நடத்துவேன். இந்த விவகாரத்தில் உண்மை விரைவில் தெரியவரும். விசாரணை நடத்துவதற்கான உத்தரவு ரத்தாகும். அரசியல் ரீதியிலான இந்த போராட்டத்தில், எனக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். அவர்களின் ஆசியே என்னை பாதுகாக்கிறது. அரசியல்சாசனம் மீதும், சட்டத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மையே வெல்லும். நான் ஏன் பதவி விலக வேண்டும். குமாரசாமி மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் ஜாமினில் உள்ளார். அவர் பதவி விலகினாரா? என் மீதான வழக்கு விசாரணை ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது. இதனை நான் எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

