கட்சி தாவுகிற கர்மம் எங்களுக்கு எதுக்கு? கோலார் மாவட்ட ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கொதிப்பு
கட்சி தாவுகிற கர்மம் எங்களுக்கு எதுக்கு? கோலார் மாவட்ட ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கொதிப்பு
ADDED : பிப் 10, 2024 11:35 PM

கோலார் மாவட்ட ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர், காங்கிரசில் சேரப்போவதாக, கோலார் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, ம.ஜ.த.,வில் நாங்கள் சந்தோஷமாக இருக்கும்போது, கட்சித் தாவும் கர்மம் எங்களுக்கு எதுக்கு என்று இருவருமே கொதித்து எழுந்து உள்ளனர்.
சீனிவாசப்பூர் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட் ஷிவா ரெட்டி
கோலார் மாவட்ட ம.ஜ.த., தலைவராக இருந்து வருகிறேன். சீனிவாசப்பூர் தொகுதி மக்கள் என்னை ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக ஆக்கி உள்ளனர்.
முல்பாகலில் இருந்து முதன் முறையாக சம்ருத்தி மஞ்சுநாத் ம.ஜ.த.,வில் இருந்து எம்.எல்.ஏ., ஆகியுள்ளார். அரசியலில் அவர் வளர வேண்டியவர். நாங்கள் ம.ஜ.த.,வில் சந்தோஷமாக, திருப்தியாக இருக்கின்றோம்.
இந்நிலையில் முதல்வரை சந்தித்து, எதுக்காக கட்சி தாவ வேண்டும். கட்சி தாவுவதற்காகவே தான் முதல்வரை சந்தித்தோம் என்பதை அவரே கூறட்டும் பார்க்கலாம்.
சித்தராமையா, எடியூரப்பா, கே.ஹெச்.முனியப்பா அனைவருமே எனது நண்பர்கள். இருந்தாலும், ம.ஜ.த.,வை விட்டு வெளியேறும்படி என்னிடம் யாரும் கூறியதே இல்லை.
அடுத்த தேர்தலில், நான் போட்டியிடுவது குறித்து இப்போது கூற முடியாது. பல தேர்தல்களில் ஓடியாடி கால்கள் நொந்து விட்டன. என்னை இப்படியே விட்டாலே போதும். ஆரோக்கியமாக இருந்து விடுவேன்.
---------
முல்பாகல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத்
முதல்வரை சந்தித்து வளர்ச்சி நிதி கேட்டதை மறைத்து, லோக்சபா தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் வதந்தி பரப்பியது நியாயமே இல்லை. முதல்வர் சித்தராமையாவை சந்தித்தது குறித்து, ம.ஜ.த., தலைவர் குமாரசாமியிடம் தெரிவித்துள்ளேன்.
முதல்வரிடம் நான் பேசியது என்ன; அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை வதந்தியாளர்கள் வெளிபடுத்த வேண்டும். தொகுதி வளர்ச்சி நிதிக்காக முதல்வர் 25 கோடி ரூபாய் வழங்கியதற்கு நன்றி.
இந்த சந்திப்பின் மாவட்ட தலைவர் வெங்கட் ஷிவா ரெட்டி, அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா ஆகியோரும் இருந்தனர். என்னை காங்கிரசில் சேருமாறு அழைப்பு விடுத்த கொத்துார் மஞ்சுநாத்தை பின்னிருந்து இயக்கியது யார் என்பது தெரிய வேண்டும்.
சட்டசபைத் தேர்தலில் தோற்ற முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், அவரின் தோட்டத்தில் இருக்கிறார். அங்கு அமர்ந்து சாப்பாடு செய்தால் மட்டும் போதும். அரசியலில் 'ஸ்கெட்ச்' போட்டு, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமா?
- நமது நிருபர் -