ADDED : டிச 21, 2024 11:01 PM
தங்கவயல்: மாரிகுப்பம் -- பங்கார்பேட்டை ரயில்வே மார்க்கத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களின் வருமானம் 30 கோடி ரூபாயாக உள்ள நிலையில், உரிகம் ரயில்வே மேம்பாலம் கட்டுவதில் அரசுக்கு என்ன தயக்கம் என தங்கவயல் மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தங்கவயலின் மத்திய ரயில் நிலையமாக உரிகம் விளங்குகிறது. ஆனால் இங்கு மேம்பாலம் அமைப்பதாக திட்டத்தில் இல்லை என்று தென்மேற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
50 ஆண்டுகள்
மாரிகுப்பத்தில் இருந்து பங்கார்பேட்டை வரையில் சாம்பியன், உரிகம், கோரமண்டல், பெமல் நகர், சின்கோட்டை ஆகிய ஆறு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் பாதை, மீட்டர் கேஜாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன், பிராட் கேஜ் ரயில் பாதையாக மாற்றினர்.
மாரிகுப்பத்தில் இருந்து கோரமண்டல் ரயில் நிலையம் வரை இரட்டை ரயில் பாதையாக இருந்தது. இதனை 25 ஆண்டுகளுக்கு முன், சிங்கிள் ரயில் பாதையாக மாற்றினர். இதனால் ஒரு ரயில் வந்து, அது பங்கார் பேட்டைக்கு சென்றடைந்த பின்னரே அங்கிருந்து மறு ரயில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிக பழமையான உரிகம் ரயில் நிலையம் அருகே லெவல் கிராசிங் உள்ளது. இதனால், ரயில்வே கேட் மூடப்படும் போது, இரு புறமும் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதனால், இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக பல தரப்பினரும் கோரி வந்து உள்ளனர்.
சாத்தியமில்லை
இதற்காக, சர்வே பணிகள் மட்டுமே நடந்துள்ளன. ஒரு கட்டத்தில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சயனைட் மலை இருப்பதால், சுரங்கப்பாதை அமைப்பது சாத்தியமில்லை என தெரியவந்தது.
இதையடுத்து, உரிகம் ரயில் நிலையம் அருகிலுள்ள குழந்தை இயேசு தேவாலயம் முதல் என்.டி.பிளாக் வரை ரயில்வே மேம்பாலம் என பிளான் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உரிகம் ரயில் நிலைய மேம்பாலம் பணிகள் எப்போது துவங்கும் என சமூக ஆர்வலர் ரமேஷ் லோகநாதன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு இருந்தார். இதற்கு, 'தற்போதைக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை' என தென்மேற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இங்கு மேம்பாலம் அமைக்கப்படுவதாக சர்வே பணிகள் நடத்துகின்றனரே தவிர, 30 ஆண்டுகளாக இதன் மீது ரயில்வே துறை கவனம் செலுத்தவில்லை. அப்படி ஒரு திட்டம் செயல்பாட்டில் இல்லை என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மாரிகுப்பம் - பங்கார்பேட்டை -வரையிலான ஆறு ரயில் நிலையங்களில் 2023- - 24ம் ஆண்டின் வருமானம் 30 கோடியே 23 லட்சத்து 6,822 ரூபாய் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
'இவ்வளவு வருமானம் கொடுக்கும் ரயில் நிலைய பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் அரசுக்கு என்ன நஷ்டம்' என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.