வீம்பு எதற்கு? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி...
வீம்பு எதற்கு? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி...
UPDATED : ஜூன் 03, 2025 11:58 PM
ADDED : ஜூன் 03, 2025 11:38 PM

பெங்களூரு : கன்னட மொழி குறித்து பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க கமல் மறுத்ததால், அதிருப்தி அடைந்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, 'தற்போதைய சூழ்நிலையில், முதலில் மன்னிப்பு கேளுங்கள். எதற்காக வீம்புடன் இருக்க வேண்டும்' என, காட்டமாக கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான, தக் லைப் திரைப்படம், நாளை உலகம் முழுதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார்.
இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கமலோ, 'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது' என்று கூறிவிட்டார்.
இதனால், அவரது படங்களுக்கு தடை விதிக்க, கே.எப்.சி.சி., என்ற கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்துள்ளது.
வழக்கு
இதையடுத்து, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் சி.இ.ஓ.,வும், தக் லைப் படத்தின் இணை தயாரிப்பாளருமான நாராயணன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், 'யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் கமல் பேசவில்லை. அவர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அவரது பேச்சு கன்னடம், தமிழ் பேசுபவர்களுக்கு இடையிலான கலாசார ஒற்றுமை, பாசத்தை வெளிப்படுத்துகிறது.
'எனவே, அவரது படத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் விதித்துள்ள தடையை நீக்கி, திரைப்படம் பிரச்னையின்றி வெளியாக உத்தரவிட வேண்டும்' என்று, கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் தியான் சின்னப்பா வாதிடுகையில், “சென்னையில் நடந்த தக் லைப் இசை வெளியீட்டு விழாவில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார். கமல் பேசியது கன்னட மொழிக்கு எதிரானது என்று கூற முடியாது. அத்துடன், தன் பேச்சுக்கு கமல் விளக்கமும் அளித்துள்ளார்,” என்றார்.
வரலாற்று ஆய்வாளரா?
நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:
எந்த அடிப்படையில் கமல் அவ்வாறு பேசினார். அவர் வரலாற்று ஆய்வாளரா, மொழியியல் வல்லுநரா? எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கூறினார். மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. படத்தின் முக்கியத்துவம் தெரிந்த அவரால், மன்னிப்பு கேட்க முடியவில்லையா?
தற்போது உங்கள் திரைப்படத்தை வெளியிட மட்டும் பாதுகாப்பு கேட்கிறீர்கள். மன்னிப்பு கேட்டாலே இது சரியாகி விடும். மொழி என்பது, மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. நீங்கள் சாதாரண மனிதர் அல்ல; பொது நபர்.
யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த அனுமதிக்க மாட்டோம். தவறுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். படத்தை வெளியிட தடை விதிப்பதால், படத்தை பார்க்க விரும்புவோரின் உரிமை பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு வந்து, தக் லைப் பார்க்க விரும்புகிறேன் என்று கூறட்டும்.
பேசும்போது நாக்கு தவறினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பேசிய வார்த்தையை திரும்ப பெற முடியாது. ஆனால், மன்னிப்பு மூலம் இதை சரி செய்யலாம். உடைந்த முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது. மொழி குறித்த தன் பேச்சுக்கு, கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின், மனு மீண்டும் விசாரிக்கப்படும். இதை யோசித்த பின் வாருங்கள். விசாரணை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மதியம் மீண்டும் விசாரணை துவங்கியது. அப்போது, மனுதாரரின் வக்கீல் தியான் சின்னப்பா, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல் எழுதிய கடிதத்தை வாசித்தார்.
அதில், 'கன்னட நாடு மற்றும் கர்நாடகாவை நான் நேசிக்கிறேன். தீமை இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடகாவில் திரைப்படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, படத்தின் வெளியீட்டுக்கான போலீஸ் பாதுகாப்பு பிரச்னை ஏற்படாது. இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன் ஆலோசனை நடத்தப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
* நீதிபதி: கே.எப்.சி.சி.,க்கு கமல் எழுதிய கடிதத்தில், ஒரு வார்த்தை (மன்னிப்பு) விடுபடுகிறது.
வக்கீல்: மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கட்டாய உணர்வு இருக்கக்கூடாது. தீமை இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், இங்கு அப்படி இல்லை.
* நீதிபதி: நீங்கள் மன்னிப்பு கேட்காமல், 'ஈகோ'வுடன் உள்ளீர்கள். நீங்கள் கமல்ஹாசனாக இருக்கலாம் அல்லது வேறு யாராவதாக இருக்கலாம். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது. ஒரு பொது நபர், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதால், அமைதியின்மை, நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு மட்டுமே கேட்க சொல்கின்றனர். ஆனால், நீங்கள் பாதுகாப்பு தேடி இங்கு வந்துள்ளீர்கள்.
* வக்கீல்: இந்த அறிக்கை, தெளிவுபடுத்தவோ அல்லது நியாயப்படுத்தவோ அல்ல. கமல், தன் நிலைப்பாட்டை அறிவித்து உள்ளார். ஒரு மொழியை இழிவுபடுத்தும் நோக்கம் அவருக்கு இல்லை.
* நீதிபதி: மனுதாரர், தற்போது திரைப்பட வர்த்தக சபையினருடன் பேச்சு நடத்த உள்ளதாகவும், அதுவரை திரைப்படத்தை திரையிட விரும்பவில்லை என்றும் கூறி உள்ளார்.
கே.எப்.சி.சி.,க்கு நடிகர் எழுதிய கடிதத்தில், மன்னிப்பு கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக உள்ளது. ஆனால், அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை. இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, பேச்சு நடக்கும் வரை, கர்நாடகாவில் இத்திரைப்படம் திரையிடப்படாது என்று வக்கீல் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இவ்வழக்கு விசாரணை, ஜூன் 10ம் தேதி மாலை 3:30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் உத்தரவால், தக் லைப் திரைப்படம், கர்நாடகாவில் நாளை வெளியாகாது.
கமல் நுழைய தடை?
கர்நாடக ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:
நடிகர் கமலுக்கு நீதிபதி சரியான பாடத்தை புகட்டி உள்ளார். கன்னடர்களின் உணர்வுகளை நீதிபதி புரிந்து கொண்டுள்ளார். அவரின் உத்தரவு, கன்னட மொழி குறித்து விமர்சிப்போருக்கு சரியான பாடமாக இருக்கும்.
கர்நாடகாவில் கமல் படத்தை மட்டுமல்ல, அவரை கூட நுழைய அனுமதிக்க மாட்டோம். மன்னிப்பு கேட்காமல், கடிதம் எழுதி உள்ளார். 350 கோடி ரூபாய் முதலீட்டில் படத்தை தயாரித்து, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கோடிக்கணக்கில் செலவழித்து எதற்காக கர்நாடகாவில் வெளியிடுகிறீர்கள். இங்கு வெளியிட வேண்டாம். கமல் மன்னிப்பு கேட்டாலும், அவரை கர்நாடகாவுக்குள் விடப்போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல் மன்னிப்பு கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீதிமன்றமும் அதையே வலியுறுத்தி உள்ளது. எனவே கன்னட அமைப்பினர், இந்த சூழ்நிலையை மோசமாக்க வேண்டாம். மொழியின் மதிப்பு பாதுகாக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் திராவிடர்கள். இதில் யாரும் பெரியவர், சிறியவர் இல்லை. அனைவரும் ஒரு மொழியில் இருந்து வந்தவர்கள். நாம் பேசும் மொழியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் இருக்கும். நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.- சிவகுமார்,துணை முதல்வர்
ஓசூரில் 'புக்கிங்' விறுவிறு
தக்லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என்பதால், அம்மாநிலத்தில் உள்ள, குறிப்பாக பெங்களூரில் உள்ள கமல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். எப்படியும் முதல் காட்சி அல்லது முதல் நாளில் படம் பார்த்துவிட வேண்டும் என, தமிழக எல்லையிலுள்ள ஓசூர் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை தொடர்புகொண்டு, டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
'ஆன்லைன்' மூலமாகவும் டிக்கெட்களை, 'புக்கிங்' செய்கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள தியேட்டர்கள் முன், தக் லைப் படத்தின் பிரமாண்ட பேனர்களை வைக்க அச்சிட்டிருந்தனர். அதேபோல், பிரமாண்ட மாலைகளுக்கும் ஆர்டர் கொடுத்திருந்தனர்.
அங்கு படம் வெளியாகாது என்பதால், அந்த பேனர்கள் மற்றும் மாலைகளை, ஓசூரிலுள்ள பாலாஜி தியேட்டருக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். ஓசூரில், எட்டு தியேட்டர்களில் தக் லைப் படம் வெளியாக உள்ளது.
***

