காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? பிரதமர் கேள்வி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? பிரதமர் கேள்வி
ADDED : ஏப் 15, 2025 02:01 AM

ஹிசார் : “காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைவராக நியமிக்காதது ஏன்?” என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹிசார் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று வந்தார்.
ஹிசார் மாவட்டத்தில் உள்ள மஹாராஜா அக்ரசென் விமான நிலையத்திலிருந்து உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு, முதல் வணிக விமானத்தை கொடி அசைத்து அவர் துவக்கி வைத்தார். மேலும், விமான நிலையத்தில் புதிய முனைய கட்டடத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் சமத்துவத்தை கொண்டு வர அம்பேத்கர் விரும்பினார். காங்., கட்சியோ, ஓட்டு வங்கி என்ற வைரசை பரப்பியது. ஒவ்வொரு ஏழையும், கண்ணியத்துடன், தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என, அம்பேத்கர் விரும்பினார்; அதற்காக அரும்பாடுபட்டார்.
ஆனால், மத்தியில் பல ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், எஸ்.டி., - எஸ்.சி., - ஓ.பி.சி., வகுப்பினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது. அவர்களின் முன்னேற்றத்துக்காக அக்கட்சி இதுவரை ஒன்றுமே செய்யவில்லை.
அம்பேத்கர் உயிருடன் இருந்த போது, காங்., அவரை அவமதித்தது. தேர்தலில் வேண்டுமென்றே அவரை தோற்கடித்தது. அவரது சிந்தனைகள், செயல்திட்டங்களை அழிக்க அக்கட்சி முயன்றது.
தற்போது அம்பேத்கரை உயர்த்தி பிடிப்பதாக காங்கிரசும், அதன் நிர்வாகிகளும் நாடகமாடுகின்றனர்.
இதை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். ஓட்டுக்காக காங்., எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, தற்போது மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
வக்ப் திருத்த சட்டத்தின் வாயிலாக, ஏழைகளின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏழை முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவர். இதுதான் உண்மையான சமூக நீதி.
தேர்தல்களில் ஓட்டுகளை பெறவே, 2013ல், வக்ப் சட்டத்தில் அவசர அவசரமாக காங்., பல திருத்தங்களை செய்தது. அக்கட்சிக்கு உண்மையிலேயே, முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்தால், கட்சியின் தலைவராக முஸ்லிம் நபரை நியமித்திருக்க வேண்டியது தானே?
இவ்வாறு அவர் பேசினார்.