காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது ஏன்: ராகுல் சொல்லும் காரணம் இதுதான்!
காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது ஏன்: ராகுல் சொல்லும் காரணம் இதுதான்!
ADDED : செப் 25, 2024 06:31 PM

ஜம்மு: '' காஷ்மீரை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மூலம் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக தான், அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜம்முவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: 1947க்கு பிறகு, நாட்டின் வரலாற்றில் பல்வேறு யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களாக மாற்றப்பட்டன. புதிதாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு உள்ளது. இது உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. உங்களிடம் இருந்து உங்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு உள்ளது.
இன்று காஷ்மீரை இம்மாநிலத்தை சேர்ந்தவர் நிர்வகிக்கவில்லை. வேறு மாநிலத்தை சேர்ந்தவர் தான் நிர்வகிக்கிறார். மனோஜ் சின்ஹா இருக்கும் வரை, வேறு மாநிலத்தவர்கள் தான் பலன்பெறுவார்கள். இம்மாநில மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இதற்காக தான் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலத்தவர் தான் காஷ்மீரை இயக்க வேண்டும் எனவும், காஷ்மீர் மக்கள் நிர்வகிக்கக்கூடாது எனவும் விரும்புகின்றனர்.
தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை அளித்து உங்களின் ஜனநாயக உரிமையை உங்களிடம் அளிக்க விரும்புகிறோம். தேர்தலுக்கு முன்னர் இது கிடைக்க வேண்டும் என மக்கள் விரும்பினர். ஆனால், அது நடக்கவில்லை.
தேர்தல் முடிந்த பிறகாவது, மாநில அந்தஸ்து அளிப்பது முக்கியம். இதற்காக பார்லிமென்டில் பிரதமர் மோடியை வலியுறுத்துவோம். அப்படி நடக்கவிட்டால், மத்தியில் ' இண்டியா ' கூட்டணி ஆட்சி அமைந்ததும் முதல்வேலையாக காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.