மஹா.,சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்காத காரணம் என்ன?
மஹா.,சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்காத காரணம் என்ன?
UPDATED : ஆக 16, 2024 06:11 PM
ADDED : ஆக 16, 2024 06:04 PM

புதுடில்லி: '' பருவமழை, பாதுகாப்பு படையினரின் தேவை உள்ளிட்டவற்றை காரணமாக மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கவில்லை'', என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த முறை, ஹரியானா உடன் இணைந்து மஹாராஷ்டிரா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதனால், மஹா., மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதற்கான காரணம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: கடந்த முறை, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சேர்ந்து நடத்தப்பட்டது. காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. இந்த ஆண்டு நான்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இது முடிந்த உடன் அடுத்தபடியாக ஐந்தாவது மாநிலத்திற்கு தேர்தல் நடக்கிறது.
படைகளின் இருப்பை கருத்தில் கொண்டு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவில் மழை காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதமாகி உள்ளது. அங்கு வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பிறகு, அங்கு தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு ராஜிவ் குமார் கூறினார்.

