செய்யாத பணிகளுக்கு ரூ.110 கோடி வழங்கியது ஏன்? துணை முதல்வர் சிவகுமாருக்கு திடீர் நெருக்கடி
செய்யாத பணிகளுக்கு ரூ.110 கோடி வழங்கியது ஏன்? துணை முதல்வர் சிவகுமாருக்கு திடீர் நெருக்கடி
ADDED : மார் 04, 2024 07:06 AM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் மழைநீர் கால்வாய் நிர்வகிப்பில் நடந்துள்ள 110 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, தகவல் தெரிவிக்கும்படி, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரான, துணை முதல்வர் சிவகுமாருக்கு, தகவல் உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனால் அவர் நெருக்கடியில் சிக்கி உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சியில், சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய்களை சீரமைத்து, நிர்வகிக்கும் பொறுப்பை 'யோகா' என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாக, ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு மூன்று ஆண்டுகளில், 110 கோடி ரூபாய் 'பில் தொகை' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், செய்யாத பணிகளுக்கு, பில் தொகை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, லோக் ஆயுக்தாவில், தகவல் உரிமை ஆணையம் புகார் செய்தது. இதன்படி வழக்கும் பதிவாகி, விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யும் படி, மாநகராட்சியிடம், தகவல் உரிமை ஆணையம் கேட்டிருந்தது. ஆனால் கோப்புகள் காணாமல் போனதாக, மாநகராட்சி செயல் நிர்வாக பொறியாளர் ஜோதி கூறியுள்ளார்.
இது குறித்து, கர்நாடக பொது ஆவணங்கள் சட்டத்தின் கீழ், போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும்படி, தகவல் உரிமை ஆணையம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநகராட்சி புகார் அளித்ததாக தெரியவில்லை.
இதை தீவிரமாக கருதிய, தகவல் உரிமை ஆணையம், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரான, துணை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. '110 கோடி ரூபாய் முறைகேட்டில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் தொடர்புள்ள அனைத்து அதிகாரிகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்திஉள்ளது.
இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், துணை முதல்வர் சிக்கி உள்ளார்.
தகவல் உரிமை ஆணையத்தின் அமரேஷ் கூறியதாவது:
எந்த பணிகளையும் நடத்தாமல், 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான பில் தொகையை, மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி உள்ளனர். இது சட்ட விரோதம். இதை தகவல் உரிமை ஆணையமும் தீவிரமாக கருதி, விசாரணை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

