பங்களாவை காலி செய்யாதது ஏன்?: முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்!
பங்களாவை காலி செய்யாதது ஏன்?: முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்!
ADDED : ஜூலை 08, 2025 12:32 AM

புதுடில்லி: ''என் இரு மகள்கள் சிறப்பு குழந்தைகள். அவர்களுக்கு ஏற்ற வீடு கிடைக்கவில்லை. அரசு பங்களாவை விரைவில் காலி செய்வேன்,'' என, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து ள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ஒய்.சந்திரசூட், கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார்.
தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வரும் அவர், இன்னும் அந்த வீட்டை காலி செய்யவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியது. அதில், பங்களாவை காலி செய்து ஒப்படைக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று கூறியதாவது:
உண்மையிலேயே பெட்டி, படுக்கைகளை பேக் செய்து விட்டோம். அனைத்தும் தயாராக உள்ளன. சில பொருட்களை ஏற்கனவே புதிய வீட்டில் வைத்து விட்டோம். ஒருசில பொருட்களே இங்கு உள்ளன.
என் மகள்கள் பிரியங்கா, மஹி இருவரும் சிறப்பு குழந்தைகள். அவர்களுக்கு ஏற்றபடி வீடு தேவைப்படுகிறது.
அதை என்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மகள்களுக்கு ஏற்றபடி வீடு தயாரானதும், இந்த வீட்டை காலி செய்து விடுவோம். இதற்கு சில வாரங்கள் கூட ஆகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.