ADDED : மே 08, 2025 12:58 AM

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக, பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதலுக்கு பின், பாக்., பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக, இரவு - பகல் பாராமல் பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரை தேர்வு செய்தது பிரதமர் மோடி தான். இந்த பெயர் மிகவும் உணர்வுப்பூர்வமானது. 'சிந்துார்' என்றால், திருமணமான ஹிந்து பெண்கள் நெற்றி வகிடில் வைக்கும் குங்கும திலகமாகும்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மதத்தை கேட்ட பின், ஆண்களை மட்டுமே சுட்டுக் கொன்றனர். இதில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் உட்பட, 26 பேர் உயிரிழந்தனர். மனைவியரின் கண் முன்னே, கணவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதனால், 25 பெண்கள் விதவையாகினர். கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்து, அதை வெற்றிகரமாக நடத்தி சாதித்து காட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட படத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதில், ஆங்கிலத்தில் இடம் பெற்ற O என்ற எழுத்துக்கு பதிலாக, ஒரு கிண்ணத்தில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின், குங்குமம் கொட்டிக் கிடக்கிறது.
இது, 25 பெண்களின் வாழ்க்கைத்துணையை பறித்த பாக்., பயங்கரவாதிகளின் இரக்கமற்ற தன்மையைக் குறிக்கிறது.