ADDED : பிப் 01, 2024 06:50 AM

சாம்ராஜ்நகர்: விதவை கொலையில் தலைமறைவாக இருந்த, கள்ளக்காதலன் 42 நாட்களுக்கு பின் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
சாம்ராஜ்நகர் கொள்ளேகால் ஆதர்ஷ் நகரில் வசித்தவர் ரேகா, 27. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், 6 வயது மகளுடன், ரேகா வசித்தார். ரேகாவுக்கும், ஆதர்ஷ் நகரின் நாகேந்திரா, 30, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 19ம் தேதி உடல் அழுகிய நிலையில், வீட்டில் ரேகா இறந்து கிடந்தார். விசாரணையில் அவரது கழுத்தை நெரித்து, நாகேந்திரா கொன்றது தெரிந்தது.
மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். அவரை போலீசார் தேடினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாகேந்திரா மைசூரில் சுற்றுவது பற்றி, கொள்ளேகால் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மைசூரு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த, நாகேந்திராவை கைது செய்தனர்.
ரேகாவை கொன்ற பின்னர், வீட்டிற்கு சென்று பணம் எடுத்துவிட்டு, அங்கிருந்து தமிழகத்தின் ஈரோட்டிற்கு தப்பி சென்று உள்ளார். அங்கு சில நாட்கள் வசித்தவர், பின்னர் மைசூரு வந்து உள்ளார்.
அதன்பின்னர் மீண்டும் ஈரோடு சென்றார். நேற்று முன்தினம் மைசூரு வந்த போது, போலீசில் சிக்கினார். அவரை, 42 நாட்களுக்கு பின்பு, போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.