ADDED : டிச 05, 2024 07:19 AM
பெலகாவி: காதலனுடன் சேர்ந்து கணவரை கிருஷ்ணா ஆற்றில் தள்ளிக் கொலை செய்த மனைவி, 11 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
பெலகாவி மாவட்ட எஸ்.பி., பீமா சங்கர் குலேத் நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2023 டிச., 27ம் தேதி, கிருஷ்ணா நதியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கரை ஒதுங்கியது. இதுதொடர்பாக விசாரித்தபோது, ராய்பாக் தாலுகாவில் உள்ள இட்டானாலா பகுதியை சேர்ந்த மல்லப்ப கம்பர் என்பது தெரிய வந்தது.
ஆனால், அவர் காணாமல் போனதாக, போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மல்லப்ப கம்பரின் மனைவி தனவ்வாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தன் மகள் காணாமல் போனதாக, தனவ்வாவின் தந்தை, மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார்.
அப்போது, கணவரை விட்டு, தன் காதலன் பிரகாஷ் பென்னாலியுடன் தனவ்வா சென்றது தெரியவந்தது. சிறிது காலம் காதலனுடன் வசித்த தனவ்வா, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வீட்டுக்கு வந்தார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வெறுப்படைந்த தனவ்வா, கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். பிரகாஷ் பென்னாலி, அவரது கூட்டாளி ராமப்பா ஆகியோர், சம்பவ தினத்தன்று மல்லப்ப கம்பரை, கிருஷ்ணா ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.