ஹஜ் யாத்திரைக்கு ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் மனைவி கைது
ஹஜ் யாத்திரைக்கு ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் மனைவி கைது
ADDED : நவ 10, 2024 12:44 AM

ஆர்.கே.நகர், சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது, 47. டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
காரைக்குடியை சேர்ந்த நைனார் முகமது என்பவர், தான் ஹஜ் புனித யாத்திரைக்கு பயணியரை அனுப்பி வருவதாக, சாகுல் அமீதை அணுகியுள்ளார்.
இதை நம்பிய சாகுல் அமீது, கடந்த ஏப்ரலில், 94 பயணியரை நைனார் முகமது மூலம், ஹஜ் யாத்திரைக்கு அனுப்பியுள்ளார்.
நைனார் முகமதுவின் மனைவி சிந்துாஸ் பானு, 44 என்பவர் வில்லிவாக்கம், அகத்தியர் நகரில் வசிக்கிறார்.
ஹஜ் பயணத்திற்கான தொகையை, நைனார் முகமது கூறியபடி, அவரது மனைவி சிந்துாஸ் பானு என்பவரது வங்கி கணக்கில் சாகுல் அமீது செலுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மேலும் 36 பயணியரை அடுத்த குழுவில் புனித யாத்திரைக்கு அனுப்ப, நைனார் முகமது 17 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அந்த தொகையையும், சிந்துாஸ் பானுவின் வங்கி கணக்கில் சாகுல் அமீது செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், 94 பயணியர் குழு, நைனார் முகமதுவின் ஏஜென்சியின் சேவை சரியில்லை என, சாகுல் அமீதிடம் புகார் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது குழு பயணத்தை ரத்து செய்யும் படியும், 17 லட்சம் ரூபாயை திரும்பி தரும்படியும் நைனார் முகமதுவிடம், சாகுல் அமீது கேட்டு உள்ளார்.
ஆனால், நைனார் முகமது தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சாகுல் அமீது புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து சிந்துாஸ் பானுவை நேற்று கைது செய்தனர். விசாரணையில், நைனார் முகமது சவுதி அரேபியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரை, கைது செய்து அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.