கள்ளத்தொடர்பால் கணவன் தற்கொலை மனைவி, கள்ளக்காதலன் விடுவிப்பு
கள்ளத்தொடர்பால் கணவன் தற்கொலை மனைவி, கள்ளக்காதலன் விடுவிப்பு
ADDED : நவ 09, 2024 11:03 PM
பெங்களூரு: மனைவியின் கள்ளத்தொடர்பால் மனமுடைந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மாண்டியா மாவட்டம், மத்துாரை சேர்ந்தவர் சதாசிவ மூர்த்தி. இவரது மனைவி பிரேமா தம்பதி. பிரேமாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பசவலிங்கே கவுடா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதை அறிந்த கணவர் சதாசிவ மூர்த்தி, மனம் உடைந்து 2010 ஜூன் 15ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வழக்குப் பதிவு செய்த தோட்டி போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக, பிரேமா, பசவலிங்கே கவுடாவை கைது செய்தனர். இருவர் மீதான வழக்கு விசாரணை முடிவில் மாண்டியா கூடுதல் மாவட்டம், செஷன்ஸ் நீதிமன்றம், பிரேமாவுக்கு மூன்று ஆண்டும்; பசவலிங்கே கவுடாவுக்கு நான்கு ஆண்டும், தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து 2013ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கை நீதிபதி சிவசங்கர் அமரண்ணவர் விசாரித்து அளித்த தீர்ப்பு:
தற்கொலை செய்து கொள்ள துாண்டினால் தான் குற்றம். மனைவியின் கள்ளத்தொடர்பால் கணவர் தற்கொலை செய்து கொண்டால், அது குற்றமாகாது.
அத்துடன், இவர்கள் இருவரும், சதாசிவ மூர்த்தி தற்கொலை செய்து கொள்ள துாண்டியதாக உறுதியான ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையெனில், தற்கொலைக்கு துாண்டியதாக, குற்றத்தை நிரூபிக்க முடியாது. எனவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.