ADDED : பிப் 15, 2024 05:13 AM
ஹெப்பால், : மனைவியை கொன்ற கணவர், 31 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.
பெங்களூரின், ஹெப்பாலில் வசித்தவர் சுப்ரமணி, 56. இவரது மனைவி சுதா. 50. திருமணமான சில மாதங்களிலேயே, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதே காரணத்தால் தம்பதிக்கிடையே, தினமும் சண்டை நடக்கும்.
கடந்த 1993ல் மனைவியை, அடித்து கொலை செய்த சுப்ரமணியை ஹெப்பால் போலீசார் கைது செய்தனர். ஜாமின் பெற்று விடுதலையான இவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இவரை தேடி கண்டுபிடித்து, ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் கேரளாவுக்கு தப்பியோடிய சுப்ரமணி, முஸ்லிம் மதத்துக்கு மாறி, தன் பெயரை ஹுசேன் சிகந்தர் என, மாற்றிக்கொண்டார். அதன்பின் சிக்கமகளூருக்கு வந்து, மசூதியில் தங்கி வாழ்க்கை நடத்தினார்.
இந்நிலையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, தேங்கி கிடக்கும் பழைய வழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்கை முடிக்கும்படி உத்தரவிட்டார். இதன்படி ஹெப்பால் போலீசார், பழைய வழக்குகளை ஆய்வு செய்த போது, மனைவி கொலை வழக்கில் கணவர் தலைமறைவானது தெரிந்தது.
அதன்பின் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சிக்கமகளூரில் அவரை கண்டுபிடித்து, நேற்று முன்தினம் கைது செய்து, பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.

