ADDED : டிச 01, 2024 04:00 AM
திருமணம் செய்து ஏமாற்றிய ராணுவ வீரர் வீட்டு முன், மனைவி தர்ணா நடத்துகிறார்.
பெலகாவி: பெலகாவியின் மச்சே கிராமத்தில் வசிப்பவர் பிரமோதா ஹஜாரே, 40. இவர் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்; போராட்டம் நடத்துபவர். இவருக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் மூலம் பிஜகனகி கிராமத்தைச் சேர்ந்த, ராணுவ வீரர் அக்ஷய் நலவடே, 26, அறிமுகமானார்.
இவர்களின் அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. தன்னை விட பிரமோதா ஹசாரே, 14 வயது மூத்தவராக இருப்பதை அக்ஷய் பொருட்படுத்தவில்லை. இருவரும் பூஜை அறையில் கடவுள் படத்துக்கு முன்னால், திருமணம் செய்து கொண்டனர்.
அக்ஷய் விடுமுறையில் ஊருக்கு வரும்போது, 15 நாட்கள் பிரமோதாவின் வீட்டில் இருப்பார். இவர்கள் திருமணம் செய்து கொண்ட விஷயம், அக்ஷய் குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்தது.
அவருக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது, பிரமோதாவுக்கு தெரிய வந்தது. இது பற்றி கேட்டபோது, “அனைவரின் தொடர்பை விட்டு விட்டு, உன்னுடனேயே இருப்பேன்,” என, சத்தியம் செய்யாத குறையாக அக்ஷய் சொன்னார். ஆனால் அண்மையில், வேறு பெண்ணுடன் அக்ஷய்க்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையறிந்த பிரமோதா, அக்ஷய் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அதன்பின் ஊர் பெரியவர்கள், பஞ்சாயத்து நடத்தி, பிரச்னையை சரி செய்வதாகக் கூறி அனுப்பினர். ஆனால் நேற்று அக்ஷய்க்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரமோதா, அக்ஷய் வீட்டுக்கு சென்றார். வீடு பூட்டப்பட்டிருந்தது; அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.
மனம் நொந்த பிரமோதா, அக்ஷய் வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சாகும் வரை தர்ணா நடத்துவதாக கூறியுள்ளார். ''நான் பல பெண்களுக்காக போராடி, நியாயம் கிடைக்க செய்தேன். இன்று எனக்கு அநியாயம் ஏற்படுகிறது. உதவிக்கு வர வேண்டும்,'' என, அவர் மன்றாடுகிறார்.

