ஆபாச 'ரீல்ஸ்' போடுவதற்கு எதிர்ப்பு கணவனை கத்தியால் குத்திய மனைவி
ஆபாச 'ரீல்ஸ்' போடுவதற்கு எதிர்ப்பு கணவனை கத்தியால் குத்திய மனைவி
UPDATED : ஆக 31, 2025 06:10 AM
ADDED : ஆக 31, 2025 05:09 AM
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும், 'ரீல்ஸ்' எனும் குறும்படங்களை ஆபாசமாக எடுத்து வெளியிட்டதை கண்டித்த கணவனை, மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாதை சேர்ந்தவர் அனீஸ். இவரது மனைவி இஷ்ரத். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இஷ்ரத், 'மொபைல் போன்' அடிமையானார்.
'பேஸ்புக், இன்ஸ்டா கிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்த்து வந்தார்.
நாளடைவில், 'ரீல்ஸ்' எனப்படும், குறும்படங்களை பதிவு செய்து வெளியிட துவங்கினார்.
இதனால், வீட்டு வேலைகளிலும், குழந்தைகளை பராமரிப்பதிலும் இஷ்ரத்தின் கவனம் குறைந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அனீஸ், மனைவியை கண்டித்தார். பதிலுக்கு சண்டையிட்ட இஷ்ரத், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு போடுவதாக மிரட்டினார். செய்வதறியாது அனீஸ் தவித்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இஷ்ரத் ஆபாசமாக வீடியோக்கள் போட துவங்கினார். இது, அனீசை மேலும் கோபப்படுத்தியது.
இது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, கணவர் அனீசை குத்தினார் இஷ்ரத்.
போலீசில், கணவர் அனீஸ் புகாரளித்தார். போலீசார், இஷ்ரத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

