தலைமைச் செயலாளராக கணவருக்கு பின் மனைவி; நாட்டில் இது 3ம் முறை!
தலைமைச் செயலாளராக கணவருக்கு பின் மனைவி; நாட்டில் இது 3ம் முறை!
ADDED : ஆக 22, 2024 07:36 AM

திருவனந்தபுரம்: கேரளா மாநில தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெறும் வேணுவுக்கு பதிலாக, அவரது மனைவியும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாரதா, தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., தம்பதி, அடுத்தடுத்து தலைமைச் செயலாளராக பதவி வகிப்பது, நாட்டில் இது மூன்றாம் முறை.
ஒப்புதல்
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று (ஆக.,21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய தலைமைச் செயலர் வி.வேணு வரும் ஆக.,31ம் தேதியுடன் ஓய்வுபெற இருப்பதால், புதிய தலைமை செயலரை நியமிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டது. அப்போது, சாரதா முரளிதரனை அடுத்த தலைமை செயலாளராக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யார் இந்த சாரதா?
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சாரதா முரளிதரன், தற்போது ஓய்வு பெற இருக்கும் தலைமை செயலர் வி.வேணுவின் மனைவி ஆவார். இவரும் மத்திய, மாநில அரசுகளின் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
அனுபவம்
1990ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற இவர், தற்போது கேரள அரசின் உள்ளாட்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வருகிறார். 2006-2012ம் ஆண்டு குடும்பஸ்ரீ திட்டத்தின் தலைமை அதிகாரி இருந்து, தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல, மத்திய அரசின்தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரியாகவும் இருந்தார். பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை செயலாளராக இருந்து கிராமப் பஞ்சாயத்து திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றார். அதுமட்டுமில்லாமல், பட்டியலின மக்களின் வளர்ச்சி துறைக்கான இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
3வது முறை
மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இது போன்று முதல் முறையாக நடந்தது. அந்த மாநில தலைமை செயலாளராக பதவி வகித்த மனோஜ் சவுனிக் டிசம்பரில் ஓய்வு பெற்ற நிலையில், அவரது மனைவி சுஜாதா இந்தாண்டு ஜூன் மாதம் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். அடுத்தபடியாக, கர்நாடகாவில், ரஜ்னீஷ் கோயலை தொடர்ந்து அவரது மனைவி ஷாலினி ரஜ்னீஷ் தலைமை செயலாளராக பொறுப்பேற்ற நிகழ்வு நடந்தது. மூன்றாவது மாநிலமாக, கேரளாவிலும் இது நடந்துள்ளது.