ADDED : ஜூலை 23, 2025 02:16 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், கணவனை படுகொலை செய்த மனைவி, பாபநாசம் திரைப்பட பாணியில் வீட்டிற்குள்ளேயே குழித் தோண்டி புதைத்துவிட்டு, 'டைல்ஸ்' பதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையின் நலசோபாராவில் வசித்து வந்தவர் விஜய் சாவன், 40. இவருக்கு சாமன் என்ற மனைவியும், ஏழு வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த, 15 நாட்களாக விஜயை தொடர்பு கொள்ள அவரது சகோதரர் முயன்றார். இது பற்றி சாமனிடம் அவர் கேட்டபோது, கணவர் விஜய் வெளியூருக்கு சென்றிருப்பதாக கூறி மழுப்பினார்.
சந்தேகம்
இதனால், சாமன் மீது விஜயின் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரது நடவடிக்கைகளை கண் காணிக்க துவங்கினர்.
சமீபத்தில், சாமன் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து விஜயின் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். வழக்கத்திற்கு மாறாக அங்கு எதும் காணப்படவில்லை.
ஆனால், வீட்டின் தரையில் மூன்று டைல்ஸ்கள் மட்டும் புதிதாக மாற்றப்பட்டிருந்தது தெரிந்தது. அதை தட்டி பார்த்தபோது பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதற்கான சத்தம் கேட்டது.
இதனால், ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட விஜயின் குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் வந்து மூன்று டைல்ஸ்களை அகற்றி, தோண்டி பார்த்தபோது தான் ஒட்டுமொத்த குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
வீட்டிற்குள்ளேயே சில அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி, கருப்பு பை ஒன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதில், அழுகிய நிலையில், விஜயின் சடலம் கிடந்ததை கண்டு போலீசாரும் மிரண்டு போயினர்.
இன்சூரன்ஸ் பணம்
இதையடுத்து அந்த வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கடந்த 19ம் தேதி தன் மகனுடன், சாமன் வீட்டை விட்டு சென்றது தெரிந்தது.
தவிர, அந்த தெருவில் இருந்த ஒரு கடையில் மூன்று சமோசாக்களை அவர் வாங்கியதும் பதிவாகி இருந்தது.
இதனால் சாமன் மீது சந்தேகம் வலுவடைந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வீடுகளை புதுப்பிக்கும் ஒப்பந்த தொழில் செய்து வரும் விஜய்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் 6 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் அவரது வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்தது.
இது தவிர, அவரது கணக்கில் மேலும் 3 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணத்தை கொண்டு புதிதாக வீடு வாங்குவதற்கு விஜய் திட்டமிட்டிருந்தார். குடியிருக்கும் வீட்டை மனைவி பெயருக்கு ஏற்கனவே மாற்றியிருந்தார்.
இதை தெரிந்து கொண்ட சாமன், விஜயின் இன்சூரன்ஸ் பணத்தை அபகரிக்கும் நோக்கில் பக்கத்து வீட்டில் இருந்த கள்ளக்காதலன் மோனா என்பவருடன் சேர்ந்து 12 நாட்களுக்கு முன் கொலைக்கு திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி
இதற்காக வீட்டிற்குள்ளேயே மூன்றரை அடி ஆழத்தில், ஆறு அடி நீளத்தில் பள்ளம் தோண்டி, அதில் படுகொலை செய்த விஜயின் சடலத்தை கருப்பு நெகிழிப் பையில் சுற்றி புதைத்துள்ளனர்.
கொலை நடந்தது வெளியே தெரியாமல் இருக்க, பாபநாசம் திரைப்படத்தில் வருவது போல, 1,200 ரூபாய் கூலி கொடுத்து, அந்த பள்ளத்தின் மீது டைல்ஸ் ஒட்டிய அதிர்ச்சி விபரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.