ADDED : ஜன 07, 2025 06:45 AM

பெங்களூரு: இன்ஜினியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய கோரி மனைவி உட்பட மூன்று பேர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ், 2024 டிசம்பர் 9 ம் தேதி பெங்களூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, ஹரியானாவில் இருந்த அதுல் சுபாசின் மனைவி நிகிதா; பிரக்யாக்ராஜில் இருந்த மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் ஆகியோரை, மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.
இதற்கிடையில், இவ்வழக்கில் ஜாமின் வழங்க கோரி, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், இம்மாதம் 4ல், மூவருக்கும் ஜாமின் கிடைத்தது. தங்கள் மீது தொடரப்பட்ட எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மூவரும் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு, நீதிபதி கிருஷ்ண குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், 'குற்றம் சாட்டப்பட்ட எனது மனுதாரர்கள் மூவருக்கும், செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. அவர்கள் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்ய, எந்த ஆதாரமும் இல்லை. இவர்களை கைது செய்ய, போலீசாரும் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இதற்கு நீதிபதி, ''நீங்கள் எப்.ஐ.ஆர்.,ஐ படித்தீர்களா. அதில் தற்கொலைக்கு துாண்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. எப்.ஐ.ஆரில் வேறு என்ன இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எனவே இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
''தற்கொலை வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை, ஆதாரங்களை, அரசு தரப்பில் சமர்ப்பிக்க வேண்டும். ஜன., 21க்கு இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.