ADDED : டிச 15, 2024 11:02 PM

ஷிவமொக்கா: 'காட்டு யானைகளின் தொல்லை ஒழிந்தது' என, விவசாயிகள் நிம்மதி அடைந்த நிலையில், காட்டு எருமைகள் கூட்டம், கிராமத்தில் புகுந்து பயிர்களை பாழாக்குகின்றன.
ஷிவமொக்கா, பத்ராவதியின் நாகலாபுரா கிராமத்தில் சில நாட்களாக காட்டு யானைகளின் தொந்தரவு இருந்தது. துங்கா ஆற்றங்கரையில் இருந்த விவசாயிகளின் நிலத்தில் புகுந்து, நெற்பயிர்களை மிதித்து நாசமாக்கின. விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.
பத்ராவதியின் கிழக்கு திசையில் பாயும் பத்ரா ஆற்றின் வழியாக, யானைகள் கிராமத்தில் புகுந்தன. சில நாட்களுக்கு பின், பத்ரா வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்களின் நிம்மதி நிலைக்கவில்லை. தற்போது காட்டு எருமைகள் கூட்டம், கிராமத்துக்குள் புகுந்து அட்டூழியம் செய்கின்றன.
வெள்ளப்பெருக்கு, பயிர்களை நோய் பாதிப்பது, செலவு அதிகம் என, பல காரணங்களால் வெறுப்படைந்த விவசாயிகள் பலரும், இம்முறை நெல் பயிரிட தயங்கினர். அதன்பின் வீட்டில் உணவுக்காவது இருக்கட்டும் என, நினைத்து நெல் பயிரிட்டிருந்தனர். இந்த பயிர்களை காட்டு எருமைகள் தின்றும், மிதித்தும் அழிக்கின்றன.
பகல் நேரத்தில், கிராமத்தின் புறநகர் சிரளாளு அருகில் குன்றில் காட்டு எருமைகள் ஓய்வெடுக்கின்றன. நள்ளிரவில் வயல்களில் புகுந்து பயிர்களை தின்றுவிட்டு, குன்றுக்கு திரும்புகின்றன. தினமும் வெவ்வேறு வயல்களை தேடி செல்கின்றன.
வன விலங்குகள் வயலுக்கு வராதபடி, விவசாயிகள் 4 அடி உயரத்தில், கம்பி வேலி போட்டுள்ளனர். ஆனால் காட்டு எருமைகள், வேலியை எளிதாக தாண்டி குதித்து, வயலுக்குள் புகுகின்றன. ஏற்கனவே பெரும்பகுதி பயிர்களை தின்றுள்ளன.
பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, வன விலங்குகளை தாக்கினாலோ அல்லது கொன்றாலோ, வனத்துறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே விவசாயிகள் வேறு வழியின்றி, பயிர்கள் பாழாவதை பார்த்தும், மவுனமாக உள்ளனர். விளைச்சல் சேதத்துக்கு நிவாரணம் வழங்கும்படி, அரசிடம் மன்றாடுகின்றனர்.