காட்டு மாடு தாக்குதல் எதிரொலி வனத்துறை பாதுகாப்பில் பணி
காட்டு மாடு தாக்குதல் எதிரொலி வனத்துறை பாதுகாப்பில் பணி
ADDED : செப் 20, 2024 02:07 AM

மூணாறு:வண்டிபெரியாறு பகுதியில் ஏலத்தோட்டங்களில் வனத்துறையினரின் பாதுகாப்புடன் தொழிலாளர் பணி செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே 63ம் மைல் பகுதியில் செப்.,17ல் காட்டு மாடு தாக்கி ஏலத்தோட்ட தொழிலாளி ஸ்டெல்லா 65, பலத்த காயம் அடைந்தார். அவர் முண்டகாயத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சம்பவம் தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்குமாறு வலியுறுத்தி தொழிலாளர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அதனையடுத்து வண்டிபெரியாறு அருகில் உள்ள 63ம் மைல், தொண்டியாறு பகுதிகளில் ஏலத்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வனத்துறையினர் முன் வந்தனர்.
அதன்படி குமுளி வனச்சரகம் செல்லார் கோவில் பிரிவு, வல்லகடவு வனசரகத்திற்கு உட்பட்ட தொண்டியாறு பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த வனக்காவலர்கள், தற்காலிக வாச்சர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை பாதுகாப்பில் தொழிலாளர்கள் அச்சம் இன்றி வேலை செய்து வருகின்றனர்.