ADDED : டிச 08, 2024 07:39 AM
பாலக்காடு: பாலக்காடு அருகே, மதம் பிடித்த காட்டு யானை தாக்கியதில் கும்கி யானை படுகாயமடைந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு, ஓலவக்கோடு அருகே உள்ள தோணி வன எல்லையோர பகுதியில், யானைகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு, அகஸ்டின், தோணி ஆகிய இரு ஆண் கும்கி யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த ஆண் காட்டு யானை ஒன்று, அங்குள்ள சோலார் வேலியை உடைத்து, பராமரிப்பு மையத்தினுள் புகுந்து, அகஸ்டின் என்ற கும்கி யானையை தந்தத்தால் குத்தி தாக்கியது.
இதில், கால் தடுமாறி விழுந்த கும்கி யானைக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. யானைகள் அலறும் சத்தம் கேட்டு, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், சப்தமிட்டும் காட்டு யானையை வனத்தினுள் விரட்டினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காயமடைந்த கும்கி யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். மதம் பிடித்த காட்டு யானை ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக பராமரிப்பு மையத்தினுள் நுழைந்துள்ளது.
நீண்ட நேரம் போராடி, காட்டு யானையை அடர்ந்த வனத்தினுள் விரட்டியுள்ளோம். அந்த காட்டு யானையின் நகர்வை கண்காணித்து வருகிறோம்.
இந்நிலையில், அருகில் உள்ள மற்றொரு பராமரிப்பு மையத்துக்கு இரு கும்கி யானைகளும் இடமாற்றம் செய்யப்பட்டன.காயமடைந்த கும்கிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.