ADDED : ஜன 13, 2024 11:25 PM

ஹாசன்: காபி எஸ்டேட் அருகே சுற்றித்திரிந்த, காட்டு யானையை, கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
ஹாசன் சக்லேஷ்பூர் யசலுாரில் கடந்த மாதம் 4ம் தேதி, காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது, காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில், அர்ஜுனா யானை இறந்தது. இதனால் காட்டு யானை பிடிக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மற்ற கும்கிகள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி பேலுார் அருகே, காட்டு யானை தாக்கியதில் வசந்த் என்பவர் இறந்தார். பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் அந்த காட்டு யானையை பிடிக்க, வனத்துறை அமைச்சர் அனுமதியுடன், கும்கி யானைகள், பேலுாருக்கு அழைத்து வரப்பட்டன.
நேற்று முன்தினம் பேலுார் அருகே, காட்டு யானை பிடிக்கும் பணி நடந்தது. ஆனால் யானை வனத்துறையினர் கண்ணில் சிக்கவில்லை.
ஆலுார் முத்தநாயக்கனஹள்ளி பகுதியில், காபி தோட்ட பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றிதிரிவதாக, வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனால் அபிமன்யு என்ற கும்கி யானை தலைமையில், ஏழு கும்கிகள் காட்டு யானையை பிடிக்கச் சென்றன.
காபி தோட்டத்தின் அருகே நின்ற, காட்டு யானை மீது, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். மயங்கி விழுந்ததும் அதன் மீது, கயிறை கட்டினர். மயக்கம் தெளிந்து எழுந்த காட்டு யானையை, கும்கிகள் ஆசுவாசப்படுத்தின.
பின்னர் பிடிபட்ட காட்டு யானை, மத்திகோடு முகாமிற்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. 'பேலுார், ஆலுார் பகுதியில் அட்டகாசம் செய்யும், காட்டு யானைகளை பிடிக்கும் பணி தொடரும்' என, வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

