பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் காங்கிரசில் ஐக்கியம்?
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் காங்கிரசில் ஐக்கியம்?
ADDED : பிப் 20, 2024 11:25 PM

பெங்களூரு,: பா.ஜ., மீது அதிருப்தியில் இருக்கும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் விரைவில், காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களான யஷ்வந்த்பூர் சோமேசேகர், எல்லாபுரா சிவராம் ஹெப்பார், இவர்கள் இருவரும் முன்பு காங்கிரசில் இருந்தவர். 2019ல் குமாரசாமி தலைமையில் இருந்த கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால், காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர்.
இடைத்தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர். கூட்டுறவு அமைச்சராக சோமசேகரும், தொழிலாளர் நல அமைச்சராக சிவராம் ஹெப்பாரும் பதவி வகித்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், அவர்கள் இருவருக்கும் 'சீட்' வழங்க, பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மேலிடம் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து, எம்.எல்.ஏ., ஆக்கியது.
தேர்தலுக்கு பின்னர் உள்ளூர் பா.ஜ., பிரமுகர்கள் தங்களுக்கு தொல்லை கொடுப்பதாக, சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினர். காங்கிரசில் இணையவும் முயன்றனர். ஆனால் அவர்களிடம் பா.ஜ., மேலிட தலைவர்கள் சமாதானம் பேசினர்.
கடந்த சில மாதங்களாக, அரசுக்கு ஆதரவாக சோமசேகர் செயல்பட்டு வருகிறார். எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணாவை ஆதரித்து, வெளிப்படையாக பிரசாரம் செய்தார். சிவராம் ஹெப்பார் அரசுக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்படவில்லை என்றாலும், பா.ஜ.,வில் இருந்து செல்லும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.
சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும், காங்கிரசில் இணைவது குறித்து, காங்கிரஸ் தலைவர்களுடன் ஒரு கட்ட பேச்சு நடத்திவிட்டதாகவும், விரைவில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் அவர்கள் இணையலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை, பா.ஜ., தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

