பா.ஜ., பொறுப்பாளர் இன்று வருகை கோஷ்டிபூசலுக்கு முற்றுப்புள்ளி?
பா.ஜ., பொறுப்பாளர் இன்று வருகை கோஷ்டிபூசலுக்கு முற்றுப்புள்ளி?
ADDED : ஜன 21, 2025 07:19 AM

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், இன்று கர்நாடகாவுக்கு வருகை தருகிறார். கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என, தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடக பா.ஜ.,வில் கோஷ்டி பூசல், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலிடம் மண்டையை பிய்த்து கொள்கிறது. மாநில தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் இடையிலான பனிப்போர், முற்றி வருகிறது. சிலர் விஜயேந்திராவுக்கு ஆதரவாக, சிலர் எத்னாலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து, கீழே இறக்கியே ஆக வேண்டும் என, எத்னால் கோஷ்டி மும்முரமாக செயல்படுகிறது. விஜயேந்திரா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. இவரும் பதவியை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
கர்நாடக பா.ஜ.,வில் நடக்கும் நிலவரங்கள், மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்யும்படி வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையே மாநில பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால், இன்று கர்நாடகாவுக்கு வருகை தருகிறார். இன்று மதியம் 3:00 மணிக்கு எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி, மாநில தலைவர் தேர்தல் குறித்து, கருத்து சேகரிப்பார். மாலை 4:00 மணிக்கு கட்சி எந்த அளவுக்கு வலுவடைந்துள்ளது என, ஆய்வு செய்யவுள்ளார்.
இரவு 7:00 மணிக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தவுள்ளார். இவ்வேளையில் விஜயேந்திரா, எத்னால் கோஷ்டியினர் பேசியது குறித்து ஆலோசிப்பார். இரண்டு தரப்பினரையும் கண்டித்து, அறிவுரை கூறுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் குழப்பத்துக்கு முடிவு கிடைக்கும் என, தொண்டர்கள் நம்புகின்றனர்.