ADDED : மார் 19, 2024 10:33 PM

பெங்களூரு: ராம்நகர் சென்னப்பட்டணாவை சேர்ந்தவர் யோகேஸ்வர். பா.ஜ., முன்னாள் அமைச்சர். தற்போது எம்.எல்.சி.,யாக உள்ளார். ராம்நகர் மாவட்ட அரசியலைப் பொறுத்தவரையில் துணை முதல்வர் சிவகுமார், யோகேஸ்வர் இடையே 'நீயா, நானா' மோதல் உள்ளது.
'பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் சுரேஷை, இம்முறை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்' என, ம.ஜ.த., தலைவர்களுடன் சேர்ந்து, யோகேஸ்வர் திட்டம் வகுத்து வருகிறார்.
ஆனால் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., சுரேஷ் தயாராகி வருகின்றனர். யோகேஸ்வரின் மகள் நிஷாவை, காங்கிரசுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன.
சிவகுமார், சுரேஷ் ஆகிய இருவரையும், கடந்த இரண்டு மாதங்களில், இரண்டு முறை நிஷா சந்தித்துப் பேசி உள்ளார். காங்கிரசில் அவரை இணைப்பது குறித்து, முதல்கட்ட பேச்சு நடந்து முடிந்து இருப்பதாகவும், இன்னொரு கட்ட பேச்சுக்கு பின்னர், நிஷா காங்கிரசில் இணைய உள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

