அரசியலுக்கு வருவாரா மனைவி முதல்வர் சித்தராமையா சூசகம்
அரசியலுக்கு வருவாரா மனைவி முதல்வர் சித்தராமையா சூசகம்
ADDED : அக் 06, 2024 06:26 AM
ராய்ச்சூர்: ''வீட்டில் இருந்து வெளியே வந்து, அரசியல் முகத்தை பார்த்திராத என் மனைவியை, அரசியலுக்கு இழுத்து வந்துள்ளனர்,'' என, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
ராய்ச்சூர், மான்வியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நான் என்ன தவறு செய்தேன்? ஆடு மேய்ப்பவரின் மகனான நான், இரண்டாவது முறை முதல்வரானதும், ஐந்தாறு வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தியதும் தவறா? என் மீதுள்ள வயிற்றெரிச்சலால், என் மனைவியை இழுத்து வருவதா; அவர் என்ன தவறு செய்தார்?
வீட்டை விட்டு வெளியே வந்து, அரசியல் முகத்தையே பார்க்காத என் மனைவியை, அரசியலுக்கு இழுத்து வந்துள்ளனர். அவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?
பா.ஜ., - ம.ஜ.த.,வின் பொய்யான, கபட நாடகத்துக்கு தக்க பாடம் புகட்ட தயாராக இருங்கள். குமாரசாமி முதல்வராக இருந்தபோது, மாநில மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வாய்ப்பு இருந்தது. அதிகாரம், வாய்ப்பு இருந்தபோது, மக்களுக்காக பணியாற்றாத குமாரசாமியும், பா.ஜ.,வினரும் எங்கள் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவதுாறு செய்கின்றனர்.
மாநிலத்தின் கருவூலம் காலியாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் இல்லை என, பொய் சொல்கின்றனர். மாநிலத்தில் பா.ஜ., அரசு இருந்தபோது, மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
பா.ஜ., இன்று வரை, தன் சொந்த பலத்துடன் ஆட்சிக்கு வந்தது இல்லை. அவர்களுக்கு மக்களின் நலன் தேவையில்லை. காரணமே இல்லாமல், ராஜினாமா செய்யுங்கள் என்கின்றனர். எனக்கு வருத்தமாக உள்ளது. மக்களுக்காகவே போராட்டத்தைத் தொடர்கிறேன். நான் எந்த மிரட்டலுக்கும் பணியமாட்டேன். என்னை பதவியில் இருந்து கீழே இறக்கும், பா.ஜ., - ம.ஜ.த.,வின் முயற்சியை முறியடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.