தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உருவெடுக்குமா?

உருவெடுக்குமா?

உருவெடுக்குமா?


ADDED : செப் 05, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பஞ்சாபில் பா.ஜ., முக்கிய அரசியல் சக்தியாக... சவால் அளிக்க காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

– சிறப்பு நிருபர் –: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு போட்டியாக, இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, முக்கிய அரசியல் சக்தியாக பா.ஜ., உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 117 சட்டசபைத் தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநில அரசியல் கட்சியினர் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்தி, வாக்காளர்களை அணுகும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

* பல்கலை தேர்தல்

சமீபத்தில் நடந்த பஞ்சாப் பல்கலை மாணவர் குழுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தலைவர் பதவியை வென்றுள்ளது. இது, பா.ஜ.,வுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள், இளைய தலைமுறை வாக்காளர்களின் அரசியல் மனநிலையைக் காட்டும் முக்கிய குறியீடாக பார்க்கப்படுகிறது.

கடந்த, 2022ல் ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு உணர்வு மற்றும் இளைஞர்களை மையப்படுத்திய பிரசாரத்தின் மூலம் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போதைய பல்கலை தேர்தல் முடிவு, அந்த இளைஞர் சமூகத்தின் ஆதரவு மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதா என்பதை அக்கட்சி மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

இதுதவிர, இந்தப் பல்கலை தேர்தல் வெற்றி, அடுத்து நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம், சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சியின் மாணவர் அமைப்பான, ‘ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா’, ஏ.பி.வி.பி.,க்கு தன் ஆதரவை அளித்தது.

இது, 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ஜ., – சிரோமணி அகாலி தளம் கட்சிக் கூட்டணியை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக எழும் வதந்திகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

* மீண்டும் உருவாகுமா?

முன்னதாக, 1996ல் லோக்சபா தேர்தலுக்காகவும், 1997ல் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறவும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தன. ஆனால், 2020ல் மத்திய அரசின் விவசாயச் சீர்திருத்தச் சட்டங்கள் தொடர்பான சர்ச்சையால் இரு கட்சிகளும் பிரிந்தன. அந்தச் சட்டங்கள் பின்னர் ரத்து செய்யப்பட்டன.

தற்போது இரு கட்சிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இல்லை. எனவே, மீண்டும் கூட்டணி அமைப்பது இரு தரப்புக்கும் பயனளிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கூட்டணி இல்லாவிட்டால், இரு கட்சிகளும் தனியாகப் போட்டியிட்டு மூன்றாம் அல்லது நான்காம் இடத்துக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடும் நிலை ஏற்படும். ஆளும் ஆம் ஆத்மி கட்சி அல்லது காங்கிரசுக்கு எதிரான மாற்று சக்தியாக உருவெடுக்க முடியாது.

* பா.ஜ.,வின் வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாப் முழுதும் பா.ஜ., தன் அமைப்பை வலுப்படுத்தி வருகிறது. மாநிலத்தின் பெரும்பான்மை மக்களாக உள்ள சீக்கிய சமூகத்தின் ஆதரவை பெறவும் முயற்சித்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களால், பா.ஜ., மீது கடும் எதிர்ப்பு எழுந்தாலும், அக்கட்சியின் ஓட்டுவங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. 2019ல் லோக்சபா தேர்தலில், 9.63 சதவீதமும், 2022ல் சட்டசபைத் தேர்தலில், 6.60 சதவீதமாகவும், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், 18.5 சதவீதமும் பா.ஜ., பெற்றுள்ளது.

இதுதவிர, ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுகளை ஒருங்கிணைத்துள்ளதுடன், சீக்கிய மற்றும் ஜாட் சமூகங்களுடன் உறவுகளை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியிலும் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கேவல் சிங் தில்லோன், பஞ்சாப் பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரசுடன் நீண்டகால தொடர்பு கொண்ட அவரது அனுபவம், கட்சிக்கு புதிய வாக்காளர் பிரிவுகளை அணுக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* உட்கட்சி பிளவுகள்

மறுபுறம், ஆளும் ஆம் ஆத்மிக்கு முக்கிய எதிரணியாக உள்ள காங்கிரஸ், உட்கட்சிப் பிரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் நோக்கில், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் மற்றும் சுச்சிந்தா சிங் ரந்தாவா ஆகியோர் கடந்த 3ம் தேதி டில்லியில் மூத்த தலைவர்களை சந்தித்தனர்.

அப்போது அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தான் விரைவில் மேற்கொள்ள உள்ள யாத்திரை குறித்தும், மாநில பிரிவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை குறித்தும் கேட்டறிந்தார். எனினும், முன்னாள் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி இந்தச் சந்திப்பில் பங்கேற்காதது, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2027 பஞ்சாப் சட்டசபைத் தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சியினரும் தங்கள் அமைப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருகின்றன. ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் எதிர்மறை அலையை எதிர்கொள்ளும் நிலையில், காங்கிரஸ் உட்கட்சி ஒற்றுமையை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. சிரோமணி அகாலி தளம் கட்சி, தன் சீக்கிய ஆதரவு அமைப்பை தக்கவைக்கப் போராடி வருகிறது. பா.ஜ., ஓட்டு வங்கியை அதிகரித்து, தனியாகவோ அல்லது கூட்டணியுடனோ முக்கிய சக்தியாக உருவெடுக்க முயன்று வருகிறது.

இந்தப் போட்டி எவ்வாறு அமையும், எந்தக் கட்சி வாக்காளர்களின் நம்பிக்கையை வெல்லும் என்பது அடுத்த சில மாதங்களில் தெளிவாகும். பஞ்சாப் அரசியல் களம் இப்போது முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us