தாமாகவே புதிய சட்டத்தை கண்டுபிடிப்பதா? உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
தாமாகவே புதிய சட்டத்தை கண்டுபிடிப்பதா? உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
ADDED : ஏப் 19, 2025 06:10 AM

புதுடில்லி: 'தண்டனையில் பாதியை அனுபவித்த பிறகே, தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய முடியும்' என, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ம.பி.,யைச் சேர்ந்த ஒருவர் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, ம.பி., உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரரின் பாக்கெட்டில் இருந்து லஞ்சப் பணம் சிக்கியது பற்றி விளக்கம் தரப்படவில்லை. முதல் மனுவை நிராகரித்த குறுகிய நேரத்தில் இரண்டாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமின் மனு தாக்கல் செய்யப்படவில்லை. தண்டனையில் பாதியை அனுபவித்த பிறகே, தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய முடியும்' என உத்தரவிட்டது.
வித்தியாசமான இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு, ம.பி., உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, ஒன்பது மாதமாக சிறையில் இருக்கும் அந்த நபருக்கு நேற்று ஜாமின் வழங்கியது.
மேலும், 'எந்தவித அடிப்படையும் இல்லாமல், புதிய சட்ட விதியை, தாமாகவே ம.பி., உயர் நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கிறதா?' என கண்டனம் தெரிவித்தது.
நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:
சாதாரண குற்ற வழக்குகளில் தண்டனையை நிறுத்தி வைக்கலாம்; விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜாமின் மனுவை அனுமதிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் 1999-ல் தீர்ப்பளித்திருக்கிறது.
இதுபோன்ற ஏராளமான உத்தரவுகள் உள்ள நிலையில், புதிய சட்ட விதியை ம.பி., உயர் நீதிமன்றம் கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் இதுபோன்ற 'அறிவுசார் நேர்மையின்மை' காரணமாக, உச்ச நீதிமன்றம் நோக்கி மனுதாரர் தள்ளப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாவிட்டால், குற்றவாளிக்கு ஜாமின் வழங்கலாம்.
பல தீர்ப்புகள் இருந்தபோதிலும், சாதாரண சட்ட மீறல் வழக்குகளில் ஜாமின் வழங்க கீழ்நீதிமன்றங்கள் தயங்குவதால், ஒவ்வொருவரும் உச்ச நீதிமன்றம் வருகின்றனர்.
இதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து, பணிச்சுமை அதிகரிக்கிறது. இங்குள்ள வழக்குகளில் 40 சதவீதம், கீழ்நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களிலேயே தீர்க்கப்படக் கூடியவை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.