மாநில அந்தஸ்து வேணும்; சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுவேன்: சொல்கிறார் உமர் அப்துல்லா
மாநில அந்தஸ்து வேணும்; சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுவேன்: சொல்கிறார் உமர் அப்துல்லா
ADDED : செப் 11, 2024 06:30 AM

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்க உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன்' என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக, காஷ்மீர் சட்டசபைக்கு, வரும், 18, 25, அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ஆங்கிலச் செய்தி சேனலுக்கு, அளித்த பேட்டி: சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பது நீண்ட போராட்டமாக இருக்கலாம், சட்டசபை தீர்மானத்தின் மூலம் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்ற முடியும். மாநில அந்தஸ்து கேட்டு சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுவேன். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
பயங்கரவாத தாக்குதல்
காஷ்மீருக்கு அதன் மாநில அந்தஸ்து நீர்த்துப் போகாமல் திரும்ப வழங்கப்படும் என பார்லிமென்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நாங்கள் ஏற்கவில்லை. கதுவா , சம்பா, ரியாசி, தோடா, பூஞ்ச், ரஜோரியில் இன்று பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன. நீங்கள் பார்த்திருப்பீர்கள். புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இது அதிகம் நடக்காது. இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.