குமாரசாமி வீட்டு முன் நிற்கணுமா? அமைச்சர் செலுவராயசாமி ஆவேசம்
குமாரசாமி வீட்டு முன் நிற்கணுமா? அமைச்சர் செலுவராயசாமி ஆவேசம்
ADDED : பிப் 08, 2025 09:18 PM

மாண்டியா: “மாநிலத்தில் தொழில் வளங்களை பெருக்க, குமாரசாமியின் வீட்டின் முன் காத்து நிற்க வேண்டுமா?” என, விவசாய அமைச்சர் செலுவராயசாமி ஆவேசமாக கூறினார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'மற்ற மாநிலங்களை போல கர்நாடகா தொழில் வளங்களை பெருக்க முயற்சி செய்வது இல்லை' என, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார். 'தொழில் வளத்திற்கு உதவி செய்யுங்கள்' என, அவர் வீட்டின் முன், நாங்கள் காத்து நிற்க வேண்டுமா?
மாண்டியா மக்கள், அவரை எம்.பி., ஆக்கி மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்துள்ளனர். மாநிலத்தின் மீது அக்கறை இருந்தால் தொழில் வளத்தை பெருக்க அவர் உதவி செய்யட்டும்.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு இன்றி நரேந்திர மோடியால் பிரதமர் பதவியில் நீடிக்க முடியாது. பதவியை காப்பாற்றிக் கொள்ள பீஹார், ஆந்திரா மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிறைய நிதிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா மீதான 'முடா' வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. 'முடா' விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. உண்மையை நன்கு ஆராய்ந்து தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு நன்றி.
மாநில அரசுக்கு எதிராக கவர்னர் தாவர்சந்த் கெலாட் செயல்படுகிறார். பல கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
அரசியலமைப்பு பதவியை வகிக்கும் கவர்னர், நீதி வழங்க வேண்டும். ஆனால் அவர் பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படுகிறார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், அன்பான மனிதர். அவரை பார்க்க பாவமாக உள்ளது. காங்கிரஸ் அரசை பற்றி ஏதாவது பேசாவிட்டால் பதவி பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.
தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்று தேவகவுடா நினைக்கிறார். அவர் இன்னும் பத்து ஆண்டுகள் வாழட்டும். எங்கள் அரசை விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும். அப்போது தான் எங்களுக்கு ஆசி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

