ஓய்வுக்கு பின் அரசு பதவி ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
ஓய்வுக்கு பின் அரசு பதவி ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
ADDED : ஜூலை 27, 2025 05:15 AM

அமராவதி: “ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியையும் ஏற்க மாட்டேன்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மே மாதம் பி.ஆர்.கவாய் பொறுப் பேற்றார்.
இவர், மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான தாராபூருக்கு நேற்று முன்தினம் சென்றார்.
கேரளா மற்றும் பீஹாரின் முன்னாள் கவர்னரும், தன் தந்தையுமான பி.எஸ்.கவாயின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவருக்கு, ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தன் தந்தையின் 10வது நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தாராபூர் கிராமத்திற்குச் செல்லும் வழியில், தன் தந்தையின் பெயரில் கட்டப்படவுள்ள ஒரு பிரமாண்டமான நுழைவாயிலுக்கு கவாய் அடிக்கல் நாட்டினார்.
பின், அமராவதி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், மறைந்த டி.ஆர்.கில்டா நினைவு மின் நுாலகத்தின் துவக்க விழாவில் பங்கேற்று, அவர் பேசியதாவது:
நான், நவ., 23ல் பணி ஓய்வு பெறுகிறேன். ஓய்வுக்கு பின், எந்த அரசு பதவியையும் ஏற்கக் கூடாது என முடிவு செய்துள்ளேன். இதை, ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன்.
எனவே, பணி ஓய்வுக்கு பின், எனக்கு அதிக நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூர் பகுதி களில் இந்த நேரத்தை செலவிட விரும்புகிறேன்.
மக்களுக்கு எளிதில் நீதி கிடைப்பதற்கான மத்தியஸ்த நடவடிக்கைகளையும் அப்போது மேற்கொள்வேன்.
இதற்காக, சட்ட ஆலோசனை மன்றங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.