கைதாகிறாரா பினராயி விஜயன்...? நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
கைதாகிறாரா பினராயி விஜயன்...? நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
ADDED : அக் 17, 2026 07:29 AM

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி காலத்தில், அவரது மகள் வீணாவுக்கு சொந்தமான ஐடி நிறுவனம் பணமோசடி புகாரில் சிக்கியது. எந்தவொரு சேவையையும் பெறாமல், கொச்சின் மினரல்ஸ் அன்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம், வீணாவின் நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
அமலாக்கத்துறையின் புகாரின் பேரில் பினராயி விஜயன், மகள் வீணா விஜயன் மீது கேரள ஐகோர்ட் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து பினராயி தொடர்ந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவரது வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில், ஹாவாலா பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காகவும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அக்.,26ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பினராயி விஜயனின் வழக்கறிஞர், 'இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார். 82 வயதான அவரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வாய்ப்புள்ளது,' எனக் குமுறினார்.
தற்போது, கொச்சியில் உள்ள அலுவலகத்தில் அக்.,23ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது, அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
