ADDED : மார் 19, 2024 06:31 AM
பெங்களூரு; கர்நாடகாவில் இரண்டு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்., 26 வெள்ளிக்கிழமை நடப்பதால், பெங்களூரில் இம்முறை அதிகளவில் ஓட்டுகள் பதிவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டுப்பதிவு குறைந்து கொண்டே செல்கிறது.
ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகமும், பெங்களூரு மாநகராட்சியும், அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஓட்டுப்பதிவு அதிகரிப்பதில்லை. படித்தவர்கள் கூட ஆர்வம் காட்டுவதில்லை.
இதற்கு வார இறுதி நாட்களை ஒட்டி ஓட்டுப்பதிவு வருவதால், ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டு போட வராமல், சுற்றுலா சென்று விடுகின்றனர்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது, பெங்களூரில் பல ஓட்டுச்சவாடிகளில், 35 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவானது. பெங்களூரு முழுதும் மொத்தமாக 56 சதவீதம் பதிவானது.
இதுவே 2019 ல் மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 54.5 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவானது. இம்முறை 60 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை கர்நாடகாவுக்கு முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்ரல் 26ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
ஏப்., 27ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் அலுவலகங்களுக்கு விடுமுறை இருக்கும். இதனால் வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை காலையில், பலரும் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது.
இதன் பின்னணியில், ஓட்டுபோடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒயிட்பீல்டு, சர்ஜாபூர், மஹாதேவபுரா, பெல்லந்துார் பகுதிகளில், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

