UPDATED : செப் 15, 2024 03:00 PM
ADDED : செப் 15, 2024 02:49 PM

புதுடில்லி: ஜாமினில் வெளியே வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் நேர்மையானவன் என்று வெற்றிச்சான்று அளித்தால் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்; இல்லாது போனால் அந்த பதவி தமக்கு வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல முறை ஜாமின் கேட்டும் சுப்ரீம் கோர்ட் 6 மாதத்திற்கு பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தது. ஆனாலும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. குற்ற வழக்கில் சட்ட நெறிமுறைப்படி முதல்வர் கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று கைதை கோர்ட் நியாயப்படுத்தியது. இதில் இருந்து அடிப்படை முகாந்திரம் இருப்பதாகவே அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் . மேலும் வெளியே வழக்கு தொடர்பாக எதுவும் பேசக்கூடாது, முதல்வர் கோப்பில் கையெழுத்து கூட போட கூடாது என்ற பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இவரது உரையில் சற்றும் எதிர்பாராத விதமாக ராஜினாமா முடிவை அறிவித்தார். இவரது இன்றைய பேச்சில் ;
' நான் சிறையில் இருந்த போது எனக்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. கடவுள் என்னோடு இருந்நதால் தான் நான் சதிகளை முறியடித்து இப்போது நிற்கிறேன். பா.ஜ.,வுக்கு எதிரான முதல்வர்கள் மீது மத்திய அரசு பொய்யான வழக்குகளை பதித்து வருகிறது. சிறையில் இருந்த போதும் நான் ஜனநாயகத்தை காத்திடவே ராஜினாமா செய்யவில்லை. தரமான கல்வி, தடையில்லா மின்சாரம் நாங்கள் வழங்குகிறோம். என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பா.ஜ.,வினர் தான் ஊழல்வாதிகள்.
தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும் முன்னதாகவே வரும் நவம்பர் மாதமே தேர்தலை நடத்தட்டும். நாங்கள் அக்னி பரீட்சைக்கு தயார். மக்கள் எங்களை நேர்மையானவர் என்று ஓட்டளித்து சான்றளித்தால் மட்டுமே நாங்கள் பதவி நாற்காலியில் அமர்வோம். ஆட்சியை கலைக்காமல் தொடர்ந்து நடத்துவோம். புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம் ' . இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
பா.ஜ., கடும் சாடல்
கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மன்சிந்தர்சிங் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அறிவித்த உத்தரவின்படியே அவர் ராஜினாமா செய்துள்ளார். அவரைதான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஒரு கையெழுத்து கூட போடக்கூடாது என்று மறைமுக உத்தரவிட்டிருக்கிறதே ! இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. மேலும் 2நாளில் ராஜினாமா என்பது அவரது மனைவியை முதல்வராக்கிட முயற்சி நடக்கிறது. இதில் சில எம்எல்ஏ.,க்கள் சம்மதம் பெற வேண்டியுள்ளது. இவ்வாறு சிங் கூறியுள்ளார்.