'ராய்ட்டர்ஸ்' எக்ஸ் கணக்கு முடக்கமா? அரசு விளக்கம்
'ராய்ட்டர்ஸ்' எக்ஸ் கணக்கு முடக்கமா? அரசு விளக்கம்
ADDED : ஜூலை 06, 2025 11:17 PM

புதுடில்லி: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து, 'ராய்ட்டர்ஸ்' சர்வதேச செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு, நம் நாட்டில் நேற்று முடங்கியது. அதில், சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை முடக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. தொழில்நுட்பப் பிரச்னையால் இது நடந்திருக்கலாம். இது குறித்து எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும். இது தொடர்பாக, எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கணக்கை முடக்கும்படி, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
பல நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கப்படவில்லை. அந்த கோரிக்கையின்படி, தற்போது கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

