கிரகணம் காரணமாக சபரிமலையில் நடை அடைப்பா? தேவசம் போர்டு மறுப்பு
கிரகணம் காரணமாக சபரிமலையில் நடை அடைப்பா? தேவசம் போர்டு மறுப்பு
ADDED : டிச 25, 2024 03:57 AM

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜை நாளில் சூரிய கிரகணம் காரணமாக மூன்றரை மணி நேரம் நடை அடைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.
சபரிமலையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: கடந்த 2018ல் ஏற்பட்ட பெருவெள்ளம், தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றால் தடைபட்ட பம்பா சங்கமம் நிகழ்ச்சி 2025 ஜன., 12ல் பம்பையில் நடைபெறும். 2025 மகர விளக்கு சீசனில் அய்யப்பன் படம் பொறித்த தங்க லாக்கெட் விற்பனைக்கு விடப்படும்.
நடப்பு சீசனில் நேற்று முன்தினம் வரை, 30.87 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 4.45 லட்சம் அதிகமாகும்.
மண்டல பூஜை தினமான நாளை காலை, 7:30 முதல் 11:00 மணி வரை சூரிய கிரகணம் காரணமாக சபரிமலை நடை அடைக்கப்படும் என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. இது சபரிமலை சீசனை சீர்குலைக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
இது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

