நான் விவசாயி மகன்; நாட்டிற்காக உயிரை கொடுப்பேன்; மவுனம் கலைத்தார் ஜெகதீப் தன்கர்!
நான் விவசாயி மகன்; நாட்டிற்காக உயிரை கொடுப்பேன்; மவுனம் கலைத்தார் ஜெகதீப் தன்கர்!
ADDED : டிச 13, 2024 02:24 PM

புதுடில்லி: 'ஒரு விவசாயி மகன் இந்த பதவியில் ஏன் அமர்ந்திருக்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இந்த நாட்டிற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன்' என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
ராஜ்யசபாவின் தலைவராக, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளார். ராஜ்யசபாவில், சபைத் தலைவருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருதலைபட்சமாக அவர் நடந்து கொள்கிறார் என, எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளன.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் வகையில், சபைக்குள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கொண்டு வந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: ஒரு விவசாயி மகன் இந்த பதவியில் ஏன் அமர்ந்திருக்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இந்த நாட்டிற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். எதிர்க்கட்சிகளுக்கு 24 மணி நேரமும் ஒரே ஒரு வேலை மட்டுமே உள்ளது. குறை கூறுவது தான்.
நீங்கள் சொல்வதைப் பாருங்கள். நான் மிகவும் பொறுத்துக் கொண்டேன். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
பா.ஜ., உறுப்பினர்களை மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பேச ஊக்குவிக்கிறீர்கள். நானும் விவசாயி மகன். உங்களை விட அதிக சவால்களை சந்தித்துள்ளேன். எங்கள் கட்சி தலைவர்களை அவமதிக்கிறீர்கள். காங்கிரஸை அவமானப்படுத்துகிறீர்களே. உங்கள் புகழைக் கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. நாங்கள் விவாதத்திற்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

