ADDED : மார் 14, 2024 04:19 AM

பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி, பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் முதல்வருமான சதானந்தகவுடாவை, காங்கிரசுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது. இந்த விஷயத்தில் துணை முதல்வர் சிவகுமார், மிகுந்த ஆர்வம் காண்பிக்கிறார்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரின் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கண் வைத்துள்ளது. பெங்களூரு வடக்கு, தெற்கு மற்றும் சென்ட்ரலில் பா.ஜ., - எம்.பி.,க்கள் உள்ளனர். இவற்றை தன் வசமாக்க, காங்கிரஸ் ஆர்வம் காண்பிக்கிறது.
மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை களமிறக்க அக்கட்சி விரும்புகிறது.
வேட்பாளர் கிடைக்காத தொகுதியில், வேறு கட்சிகளில் இருந்து அதிருப்தி தலைவர்களை அழைத்து வந்து களமிறக்க, மாநில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.
திட்டம்
பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதியில், இன்னாள் எம்.பி., சதானந்தகவுடாவுக்கு, சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை காங்கிரசுக்கு அழைத்து வந்து, வேட்பாளராக்க துணை முதல்வர் சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார்.
சதானந்தகவுடாவை காங்கிரசுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கலபுரகியில் சிவகுமார் கூறியதாவது:
காங்கிரசில் இணையும் விஷயமாக, எங்களை தொடர்பு கொண்டு பல தலைவர்கள் பேசியுள்ளனர். எம்.பி., உட்பட, பா.ஜ.,வின் மூவர் பேச்சு நடத்தியுள்ளனர்.
யார், யார் காங்கிரசுக்கு வருகின்றனர் என்பதை, இப்போது பகிரங்கப்படுத்த முடியாது.
'எங்கள் கட்சியின் கொள்கை, சிந்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு வருவதானால், வாருங்கள்' என, கூறியுள்ளேன். பலர் ஒப்புக்கொண்டு, காங்கிரசுக்கு வர சம்மதித்தனர். பா.ஜ., - எம்.பி., சதானந்தகவுடா, காங்கிரசுக்கு வந்தால் வரவேற்கிறோம்.
காங்கிரசின் இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியல், மார்ச் 15ல் வெளியாகும். டில்லியில் தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டத்துக்கு பின், பட்டியல் வெளியிடப்படும்.
ஓட்டு முக்கியம் அல்ல
தேர்தலை மனதில் கொண்டு, வாக்குறுதித் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்க்கைக்காக திட்டங்களை செயல்படுத்தினோம்.
எங்களுக்கு ஓட்டு முக்கியம் அல்ல. இம்முறை லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 20 சீட்களில் வெற்றி பெறுவோம். பா.ஜ.,வின் எம்.பி.,க்களில் பத்து பேரை மாற்றுவதாக கூறப்படுகிறது.
டாக்டர் மஞ்சுநாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது, எனக்கு கவுரவம் உள்ளது. இம்முறை பெங்களூரு ரூரலில், மஞ்சுநாத் களமிறங்கட்டும். எங்களுக்கு கவலையில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.
- நமது நிருபர் -

