மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயிலில் கட்டண சலுகை உண்டா? பார்லி.,யில் அமைச்சர் பதில்
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயிலில் கட்டண சலுகை உண்டா? பார்லி.,யில் அமைச்சர் பதில்
ADDED : டிச 12, 2025 05:53 AM

அண்டை நாடுகளை விட இந்தியாவில் ரயில் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்லிமென்டில் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, கடலுார் தொகுதி காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் பேசுகையில், “ மூத்த குடிமக்களுக்கு, ரயில்களில் அளிக்கப்பட்ட கட்டணச்சலுகை, கொரோனா காலத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த சலுகை மீண்டும் வழங்கப்படுமா?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில்வே ஸ்டேஷன்களில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசு ஆண்டுதோறும், 60,000 கோடி ரூபாயை ரயில் போக்கு வரத்துக்காக மானியமாக வழங்குகிறது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அங்குள்ள ரயில் கட்டணங்களைக் காட்டிலும், 10ல் ஒரு பங்கு கட்டணமே நம் நாட்டில் வசூலிக்கப் படுகிறது.
மேலும், அண்டை நாடுகளில் இருப்பதைக் காட்டிலும், இந்தியாவில், ரயில் கட்டணங்கள், மிகவும் மலிவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய விஷ்ணு பிரசாத், “வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணியர், அதற்குரிய டிக்கெட்டுகளை ரயில் நிலையங்களில் வாங்க சென்றால், ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயிலில் ஏறிய பின், டிக்கெட் பரிசோதகர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
“ரயிலுக்குள் சென்று டிக்கெட் கேட்டால், டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத் தொகையுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற முடியாதா?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இது குறித்து என் கவனத்திற்கு இப்போதுதான் வந்துள்ளது. உடனே, விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார்.
- நமது டில்லி நிருபர் -

