சிவகுமார் வியூகம் பலிக்குமா? உட்கட்சி எதிரிகளை ஓரங்கட்ட ‛ பிளான்'
சிவகுமார் வியூகம் பலிக்குமா? உட்கட்சி எதிரிகளை ஓரங்கட்ட ‛ பிளான்'
ADDED : பிப் 10, 2024 06:10 AM

தன் பதவியை தக்க வைத்து கொள்ள, துணை முதல்வர் சிவகுமார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், துணை முதல்வர் சிவகுமார் பங்களிப்பு அதிகம் என்பதை, யாராலும் மறுக்க முடியாது. தேர்தலுக்கு முன்பே முதல்வர் பதவி எதிர்பார்த்தார். ஆனால், அனுபவம் வாய்ந்த சித்தராமையாவுக்கு, முதல்வர் பதவி கிடைத்ததால், சிவகுமார் துணை முதல்வர் ஆனார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, சிவகுமார் முதல்வர் ஆக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், சிவகுமாரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், கூடுதலாக மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவின் அணியை சேர்ந்த, மூத்த அமைச்சர்கள் ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர், கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இது, சிவகுமாருக்கு எரிச்சலை கிளப்பி உள்ளது. எனவே துணை முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ள, அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தேசிய அரசியல்
துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் தரும் ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளியை லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்து, தேசிய அரசியலுக்கு அனுப்ப, 'பிளான்' போட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் தேசிய அரசியலுக்கு சென்று விட்டால், துணை முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்வதுடன், வருங்காலத்தில் முதல்வர் ஆவதில், தனக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றும் நினைக்கிறார்.
இதனால் கட்சி மேலிட தலைவர்களிடம், அவர்கள் இருவருக்கும் 'சீட்' கொடுங்கள் என்று, அழுத்தம் கொடுத்து வருகிறார். கடந்த 2021ல் பெலகாவி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சதீஷ் ஜார்கிஹோளி 5,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோற்றார்.
இம்முறை அவர் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று, காங்கிரஸ் மேலிடமும் நினைக்கிறது. ஆனாலும் தேசிய அரசியலுக்கு செல்ல, சதீஷ் ஜார்கிஹோளிக்கு துளியும் விருப்பம் இல்லை. அவர் தேசிய அரசியலுக்கு செல்ல, ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பக்கா பிளான்
சதீஷ் ஜார்கிஹோளி எம்.பி., ஆனால், அவரது பொதுப்பணி அமைச்சர் பதவி காலியாகும்.
லட்சுமண் சவதியை அமைச்சராக்கி, அவருக்கு பொதுப்பணித்துறை கொடுப்பதுடன், பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி கொடுக்கவும், சிவகுமார் திட்டம் வைத்து உள்ளார். பெலகாவி அரசியலில் காங்கிரசில் லட்சுமி ஹெப்பால்கர், சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமண் சவதி என்று மூன்று அணிகள் உள்ளன.
சதீஷ் ஜார்கிஹோளியை டில்லிக்கு அனுப்பிவிட்டால், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர், லட்சுமண் சவதியை ஒருங்கிணைத்து விடலாம் என்பதும் சிவகுமாரின் எண்ணம்.
இதன் மூலம் பெலகாவி அரசியலிலும் மூக்கை எளிதாக நுழைக்கலாம் என்றும், பலே கணக்கு போட்டு வைத்து உள்ளார். அவரது கணக்கு சரிவருமா என்பது தெரியவில்லை\- நமது நிருபர் -.