தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்களா: காங்., கூட்டணியை முறிப்பீர்களா ஸ்டாலின்?: பிரதமர் மோடி கேள்வி
தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்களா: காங்., கூட்டணியை முறிப்பீர்களா ஸ்டாலின்?: பிரதமர் மோடி கேள்வி
ADDED : மே 08, 2024 05:48 PM

ராஜம்பேட்டை: ''தென்னிந்திய மக்கள் ஆப்ரிக்கர்களை போல இருப்பதாக கூறிய காங்., தலைவர் சாம் பிட்ரோடாவின் பேச்சை ஏற்கிறீர்களா? இத்தகைய பெரிய குற்றச்சாட்டுக்கு பிறகு, தமிழரின் சுய மரியாதைக்காக, காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?'' என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா, ''இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் தோற்றமளிக்கின்றனர். இந்தியாவை போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்'' என சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தென்னிந்திய மக்கள் ஆப்ரிக்கர்களை போல இருக்கிறார்கள் என்று காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா பேசியதை ஏற்கிறீர்களா என்பதை கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
தமிழக கலாசாரம் பற்றிப் பேசும் அம்மாநில முதல்வர் ஸ்டாலின், இத்தகைய பெரிய குற்றச்சாட்டுக்கு பிறகு, தமிழரின் சுய மரியாதைக்காக, காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள முன் வருவாரா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

