ADDED : ஜன 25, 2026 01:40 AM

புதுடில்லி: குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதிக்கு முன்தினம், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் யார் யாருக்கு கிடைக்கும் என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிடும்.
இந்த பத்ம விருதுகளுக்காக பல வி.ஐ.பி.,க்கள் முயற்சித்தாலும், இந்தியாவின் மூலை முடுக்குகளில் தேசத்திற்காக பணியாற்றி, சமுதாயத்தை முன்னேற்றியவர்களுக்கு தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் உயரிய விருது, பாரத ரத்னா; இந்த விருது கடந்தாண்டு எவருக்கும் வழங்கப் படவில்லை. இந்தாண்டாவது கிடைக்குமா என்றால், 'மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்புள்ளது' என, பிரதமர் அலுவலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
'வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்படலாம்' என சொல்லப்படுகிறது. இந்த தேசிய பாடலை, 1857 நவம்பரில் எழுதினார், சட்டர்ஜி.
இந்த பாடல், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இதன் 150வது ஆண்டு விழா, மத்திய அரசால் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, சட்டர்ஜிக்கு விருது வழங்கப்படலாம்.
தமிழகத்திலிருந்தும் ஒருவருக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாம். தென் தமிழகத்தில் பிறந்த அந்த தலைவர், ஆன்மிகத்தோடு தேசியத்தை வளர்த்தவர்.
இதுவரை தமிழகத்திலிருந்து பாரத ரத்னா விருது பெற்றவர்கள் ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், காமராஜர், சர் சி.வி.ராமன், சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர்., மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன்.

