ADDED : அக் 07, 2024 11:23 PM

பாட்னா: பீஹாரில், துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யும் போது, அங்கிருந்த, 'சோபா, ஏசி' உள்ளிட்ட பொருட்களை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமார், கடந்த ஜன., இறுதியில் கூட்டணியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி வைத்த அவர், பீஹார் முதல்வராக ஒன்பதாவது முறையாக பதவியேற்றார். பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த போது, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவி வகித்தார். இவர், பீஹாரின் பாட்னாவில் உள்ள துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கி இருந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இல்லத்தை காலி செய்யும்படி, தேஜஸ்வி யாதவுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டது. இதன்படி, துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை, நேற்று முன்தினம் அவர் காலி செய்தார்.
இந்நிலையில், துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து, சோபா, ஏசி போன்ற பொருட்கள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் தனிப்பட்ட செயலர் சத்ருதன் குமார், இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். வீட்டை காலி செய்யும் போது, இந்தப் பொருட்களை தேஜஸ்வி யாதவ் எடுத்துச் சென்றிருக்கலாம் என, அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதை திட்டவட்டமாக மறுத்த ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, பா.ஜ., அற்ப அரசியலில் ஈடுபடுவதாக கூறினார்.

