மத்திய அரசின் அறிவிப்பால் கைதிகளுக்கு விடிவு ஏற்படுமா?: நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் எதிர்பார்ப்பு
மத்திய அரசின் அறிவிப்பால் கைதிகளுக்கு விடிவு ஏற்படுமா?: நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் எதிர்பார்ப்பு
UPDATED : நவ 24, 2024 03:23 AM
ADDED : நவ 23, 2024 11:55 PM

சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், கைதிகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையில், மூன்றில் ஒரு பங்கு காலம் சிறையில் இருந்தால் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்தார். இதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், இந்தப் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டு விடுதலை கிடைக்குமா என, லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்ற னர்.
நம் நாட்டு சிறைகளில் அதிகளவில் விசாரணைக் கைதிகள் உள்ளதால், எப்போதும் நெரிசல் காணப்படுகிறது. இது, அரசுக்கு வீண் செலவையும், தேவையில்லாத சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா' என்ற சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த, சட்டத்தின் 479வது பிரிவின்படி, துாக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பில்லாத, மற்ற குற்றங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய அதிகபட்ச தண்டனையில், பாதி காலத்தை அனுபவத்திருந்தால், விடுதலை செய்யலாம்; இது முந்தைய சட்டத்திலும் உள்ளது.
விசாரணை கைதி
அதேநேரம் புதிய சட்டத்தில், முதல் முறையாக குற்றத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் விசாரணைக் கைதி, அதிகபட்ச தண்டனையில், மூன்றில் ஒரு பங்கு காலத்தை சிறையில் அனுபவித்திருந்தால், அவரை விடுதலை செய்யலாம்.
இந்த சட்டங்களின்படியே, சமீபத்தில் நடந்த 5-0வது அனைத்திந்திய போலீஸ் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், தண்டனையின் பெரும்பகுதியை சிறையில் அனுபவித்தவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
வரும் 26ம் தேதி அரசியலமைப்புச் சட்ட தினமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் இந்த நடவடிக்கையை செயல்படுத்தும்படி கூறியிருந்தார்.
ஆனால், இதில் நடைமுறை சிக்கல்கள் உட்பட பல தடைகள் உள்ளதால், இந்தக் காலக்கெடுவுக்குள், சிறையில் உள்ளோருக்கு விடுதலை கிடைக்குமா என்பது சந்தேகமே.
குறிப்பாக, 2022ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரங்களின்படி, சிறையில் உள்ள 5,73,220 கைதிகளில், 4,34,302 பேர் விசாரணை கைதிகள்.
விடுதலை
இவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சிறையிலேயே அடைப்பட்டுள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டில், விசாரணை கைதிகளை ஜாமினில் விடுவிப்பது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், 2009ம் ஆண்டுவரை இதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
அந்த ஆண்டில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஒரு உத்தரவை பிறப்பித்தார். சிறிய வழக்குகளில் சிறையில் உள்ளோர் பட்டியலை எடுத்து, சொந்த ஜாமினில் அவர்களை விடுப்பது தொடர்பாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.
ஆனால், சொந்த ஜாமின் வழங்க முடியாததால், வழக்கில் கிடைக்கும் காலத்தைவிட பலர், சிறையில் கழித்துள்ளனர்.
இதை உணர்ந்தே நரேந்திர மோடி அரசு, கடந்தாண்டு ஓர் உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி, விசாரணைக் கைதிகளுக்கு, 40,000 ரூபாயும், தண்டனை பெற்றவர்களுக்கு, 25,000 ரூபாயும் நிதி உதவி வழங்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி, ஆறு மாநிலங்களே பதில் அளித்தன. அதில் மஹாராஷ்டிரா மட்டும், 10 விசாரணை கைதிகள் மற்றும் ஒரு தண்டனை பெற்ற கைதியை விடுதலை செய்துள்ளது.
மற்ற மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசாரணை கைதிகளும், அவர்களது குடும்பத்தினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -