முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளிப்பாரா?
முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளிப்பாரா?
ADDED : ஆக 06, 2024 02:08 AM
பெலகாவி: ''மூடா முறைகேடு தொடர்பாக, கவர்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால், நாங்களும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மனைகள் ஒதுக்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதற்கான ஆவணங்களை, சமூக ஆர்வலர் ஆபிரஹாம், கர்நாடக லோக் ஆயுக்தாவில் வழங்கி புகார் செய்திருந்தார். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ், முதல்வரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.
'இதன் அடிப்படையில், உங்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் விசாரணை நடத்த ஏன் அனுமதி அளிக்க கூடாது' என்று கேள்வி எழுப்பி, முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அளித்திருந்தார்.
இந்த நோட்டீசுக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. மாறாக, அந்த நோட்டீசை திரும்ப பெறும்படி கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கவர்னரும், முதல்வரும் சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளனர். கவர்னர் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இது குறித்து, பெலகாவியில் முதல்வர் சித்தராமையா, நேற்று கூறியதாவது:
மூடா முறைகேடு தொடர்பாக, கவர்னர் வழங்கிய நோட்டீசை அவர் திரும்ப பெற வேண்டும். ஆபிரஹாம் அளித்த புகாரை நிராகரிக்க வேண்டும்.
அவர் எத்தகைய முடிவு எடுப்பார் என்று காத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை, அவர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால், நாங்களும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர்கூறினார்.